மல்யுத்த வீராங்கனைகளால் பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான பாஜக முன்னாள் எம்.பியும், இந்திய மல்யுத்த சம்மேளன முன்னாள் தலைவருமான பிரிஜ் பூஷன் சிங் கடந்த ஆகஸ்ட் 3 அன்று டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தால் அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுவிக்கப்பட்டார்.
அவருடன் இந்த குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான மல்யுத்த சம்மேளன முன்னாள் உதவிச் செயலாளர் வினோத் தோமரும் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
வீராங்கனைகள் குற்றச்சாட்டுகளுக்கு போதிய ஆதாரங்கள் இல்லாததால் இவ்வழக்கிலிருந்து கூடுதல் முதன்மை தலைமை பெருநகர நீதிபதி அஸ்வினி பன்வார் அவர்களை விடுவித்த நிலையில் அவர் வழங்கிய தீர்ப்பு குறித்த விரிவான விளக்கம் வெளியாகி உள்ளது.
நீதிமன்றம் வழங்கிய இந்த தீர்ப்பு குறித்த விரிவான தகவல்கள் இணையத்தில் தற்போது பதிவேற்றப்பட்டுள்ளன.
அதில் பிரிஜ் பூஷன் ஏன் விடுவிக்கப்பட்டார், குற்றச்சாட்டுகளை ஏன் நீதிமன்றம் புறக்கணித்தது என்பது குறித்த விரிவான விளக்கங்கள் உள்ளன.
நீதிபதி அஸ்வினி பன்வார் தனது தீர்ப்பில், பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் பெண் மல்யுத்த வீரர்களின் குற்றச்சாட்டுகள் அனைத்தும் "இந்த வழக்கு பொய்யானது, ஜோடிக்கப்பட்டது மற்றும் அரசியல் உள்நோக்கம் கொண்டது" என்று குறிப்பிட்டுள்ளார்.
தீர்ப்பில் கூறியுள்ளதாவது, "ஒலிம்பிக் தகுதிச் சுற்றின் போது நடந்ததாகக் கூறப்படும் ஒரு சம்பவத்தில், ஒரு வாக்குமூலத்தில் அந்தச் சம்பவம் 2015இல் துருக்கியில் நடந்ததாகக் கூறிய புகார்தாரர், மற்றொரு வாக்குமூலத்தில் அது 2016இல் மங்கோலியாவில் நடந்ததாக கூறியுள்ளார்.
நாட்டின் பெயர் மற்றும் ஆண்டிலேயே இவ்வளவு பெரிய முரண்பாடு இருக்கிறது.
அரியானாவை தளமாக கொண்ட மகாதேவ் மல்யுத்த பயிற்சி அகமெடியின் சில பயிற்சியாளர்களாலும் வீராங்கனைகளாலும் பின்னப்பட்டதாக தெரிகிறது
2018இல் டெல்லி மைதானத்தில் குடும்பத்தினர், பயிற்சியாளர்கள் மற்றும் பிற வீரர்கள் முன்னிலையில் பாலியல் அத்துமீறல் நடந்ததாகக் கூறப்பட்ட போதிலும், எந்தவொரு சுயாதீன சாட்சியும் பிரீஜ் பூஷனுக்கு எதிராக வாக்குமூலம் அளிக்க வரவில்லை.
வழக்கில் பாதிக்கப்பட்டவர்களாகக் கூறப்பட்ட 5 பெண்களில் 2 பேர் பிரிஜ் பூஷன் எந்த பாலியல் அத்துமீறலிலும் ஈடுபடவில்லை என்றும் மகாதேவ் அகாடமி பயிற்சியாளர்களின் மிரட்டல் மற்றும் வற்புறுத்தலின் பேரிலேயே தாங்கள் முன்னர் வாக்குமூலம் அளித்ததாகவும் பிறழ் சாட்சியம் அளித்துள்ளனர்.
போராட்டத்தில் உட்காருவதற்கு முன்பாக எந்தவொரு பெண் மல்யுத்த வீரரும் பாலியல் துன்புறுத்தல் குறித்த புகார்களையோ அல்லது பாதிக்கப்பட்டவர்களின் பெயர்களையோ வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை.
ஆனால், பின்னர் தேர்வு செய்யப்பட்ட பெண் மல்யுத்த வீரர்கள் முன்னால் வந்து, அலங்காரமாக ஒரே பாணியிலான தயார் செய்யப்பட்ட புகார்களைக் காவல்துறையிடம் அளித்துள்ளனர்.
அனைத்துப் புகார்களிலும் உள்ள குற்றச்சாட்டுகள் ஒரே மாதிரியாக உள்ளது.
பாலியல் அத்துமீறல் நடந்ததாகக் கூறப்படும் காலக்கட்டத்திற்குப் பிறகும், புகாரளித்தவர்கள் பிரிஜ் பூஷனுடன் சுமூகமான உறவைப் பேணி வந்துள்ளனர். பொது நிகழ்ச்சிகளில் அவருடன் இயல்பாகப் பழகியுள்ளனர்.
நீண்ட காலத்திற்குப் பிறகு அளிக்கப்பட்ட இந்தப் புகார்கள் அனைத்தும் கற்பிக்கப்பட்டவை மற்றும் முன்கூட்டியே திட்டமிடப்பட்டவை. அரசுத் தரப்பு சுமத்திய குற்றச்சாட்டுகளை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்க தவறிவிட்டது.
இதனால் பிரிஜ் பூஷன் சிங் மற்றும் அவருடன் குற்றம் சாட்டப்பட்ட வினோத் தோமரை நீதிமன்றம் கௌரவமாக விடுவிக்கிறது" என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பிரிஜ் பூஷன் சிங் பாஜகவில் மிகவும் சக்திவாய்ந்த தலைவர் ஆவார். 2023 இல் அவர் மீது புகார் அளித்தும் வழக்குப் பதிய டெல்லி போலீஸ் மறுத்தது. வினேஷ் போகத், சாக்ஷி மாலிக், பஜ்ரங் புனியா உள்ளிட்ட மல்யுத்த வீரர் வீராங்கனைகள் டெல்லி ஜந்தர் மந்தரில் 2023 ஜனவரி முதல் ஜூன் வரை போராட்டம் நடத்தினர். அவர்கள் மீது போலீஸ் அடக்குமுறை ஏவிவிடப்பட்டது. பல்வேறு தரப்பில் இருந்து வந்த அழுத்தத்தின் பின் பிரிஜ் பூஷன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
அவர் மல்யுத்த சம்மேளன தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இருப்பினும் வழக்கில் அவர் ஆதிக்கம் செலுத்த முயல்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தன. இதன்பின் 2024 இல் நடந்த எம்.பி தேர்தலில் அவருக்கு பதில் அவரின் மகனுக்கு சீட் வழங்கப்பட்டது.
தொடர்ந்து அவர் மீது வழக்கு நடந்து வந்த நிலையில் தற்போது அவர் குற்றமற்றவர் என நீதிமன்றம் விடுத்துள்ளது. பிறழ் சாட்சியம் அளிக்க கூறி பாதிக்கப்பட்டவர்களில் 2 வீராங்கனைகள் மிரட்ட்டப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த தீர்ப்பை எதிர்த்து பாதிக்கப்பட்ட வீராங்கனைகள் மேல்முறையீடு செய்ய திட்டமிட்டுள்ளனர்.