இந்தியா

கேரளத்தில் திருமணமான 4 மாதத்தில் பரிதாபம்: கர்ப்பிணி-வாலிபர் தற்கொலை

குறிப்பிட்ட நேரத்தில் விமானம் வந்த நிலையில் சானுகுட்டன் வரவில்லை. அவரது செல்போனை தொடர்பு கொண்ட போது எடுக்கவில்லை.

கேரளம் மாநிலம் ஆலப்புழா அருகே உள்ள எடத்வா பகுதியை சேர்ந்தவர் சானுகுட்டன் (வயது 30). இவரது மனைவி ஹரிஷ்மா (27). இவர்களுக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் சானுகுட்டன் ஒரு மாதத்திற்கு முன்பு தோஹா நாட்டிற்கு வேலைக்குச் சென்றார்.

மனைவி தற்கொலை

அதன்பிறகு ஹரிஷ்மா கேரளம் மாவேலிக்கரை உம்பர் நாடு பழையதோப்பில் உள்ள வீட்டில் வசித்து வந்தார். 3 மாத கர்ப்பிணியாக இருந்த அவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தூக்குப்போட்டு தற்கொலை செய்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் தோஹா நாட்டில் உள்ள சானு குட்டனுக்கு தகவல் கொடுத்தனர். இதனை தொடர்ந்து அவர் கேரளம் வருவதாக உறவினர்களிடம் தெரிவித்து உள்ளார். இணைப்பு விமானத்தில் பெங்களூரூ வந்து அங்கிருந்து நெடும்பாசேரி விமான நிலையத்திற்கு வருவதாக கூறியுள்ளார்.

மாயம்

அவரை அழைத்து வர சகோதரர் மற்றும் உறவினர்கள் நெடும்பாசேரி விமான நிலையம் வந்தனர். குறிப்பிட்ட நேரத்தில் விமானம் வந்த நிலையில் சானுகுட்டன் வரவில்லை. அவரது செல்போனை தொடர்பு கொண்ட போது எடுக்கவில்லை. இதனை தொடர்ந்து அவரை அழைத்துச் செல்ல வந்தவர்கள், பெங்களூரூ விமான நிலைய அதிகாரிகளை தொடர்பு கொண்டனர். அப்போது, சானுகுட்டன் விமானத்தில் பெங்களூரூ வந்திருப்பது உறுதியானது. அதன்பிறகு அவர் என்ன ஆனார்? என்பது மர்மமாக இருந்தது. இதனை தொடர்ந்து பெங்களூரூவில் உள்ள மலையாள சமாஜம் மற்றும் போலீசார் மூலம் தேடத் தொடங்கினர்.

வாலிபர் தற்கொலை

இந்த நிலையில் பெங்களூரூவில் உள்ள ஒரு விடுதியில் ஒருவர் தற்கொலை செய்த தகவல் அவர்களுக்கு கிடைத்தது. இதனால் அடுத்த அதிர்ச்சிக்குள்ளான சானு குட்டனின் உறவினர்கள் பெங்களூரூ விரைந்தனர். அங்கு சென்று பார்த்தபோது தான் தற்கொலை செய்தது சானு குட்டன் என தெரியவந்தது. மனைவி இறந்த தகவல் கேட்டு வந்தவர் பெங்களூரூ விடுதியில் தற்கொலை செய்த சம்பவம் உறவினர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கணவன்-மனைவி தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது மர்மமாக உள்ளது. இந்த சம்பவம் குடும்பத்தினரிடம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.