மத்தியப் பிரதேசம் திண்டோரி மாவட்டத்தில் ரசகுல்லா என்று நம்பி வெடிகுண்டை சாப்பிட்ட நபர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக அதே கிராமத்தைச் சேர்ந்த இருவரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.
திண்டோரி மாவட்டம் படாரியா கிராமத்தைச் சேர்ந்த 35 வயதான ராஜேந்திர பரௌத்தியா (35) என்பவர் கடந்த செவ்வாய்கிழமையன்று இரவு சாப்பிட்டுவிட்டு, குடும்பத்தினருடன் வீட்டின் முற்றத்தில் அமர்ந்து, நெருப்பு மூட்டி குளிர்காய்ந்து கொண்டிருந்துள்ளார்.
அப்போது அதேக் கிராமத்தைச் சேர்ந்த ராம்பகத் பரௌத்தியா என்பவர் அங்கு வந்து, 'ரசகுல்லா' என்று கூறி ஒரு உருண்டையை ராஜேந்திராவிடம் சாப்பிடக் கொடுத்துள்ளார்.
உடனே அதை வாயில் போட்டு ராஜேந்திரா கடிக்க அப்பொருள் வெடித்துள்ளது. இதில் அவரது வாய் மற்றும் தாடையில் பலத்த காயம் ஏற்பட்டது.
வெடிவிபத்தைத் தொடர்ந்து, ராஜேந்திரனின் குடும்பத்தினர் அவரை ஒரு ஆட்டோவில் திண்டோரி மாவட்ட மருத்துவமனைக்கு அவசரமாகக் கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், அவர் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
பின்னர் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
விசாரணையில், ராஜேந்திரா கடித்தது காட்டுப்பன்றிகளை வேட்டையாடப் பயன்படுத்தப்படும் சிறிய ரக நாட்டு வெடிகுண்டு என்பது தெரியவந்துள்ளது.
ம.பி.யின் சில கிராமப்புறங்களில் காட்டுப்பன்றிகளைக் கொல்வதற்காக, வீட்டில் தயாரிக்கப்பட்ட வெடிபொருட்களைப் பயன்படுத்துகின்றனர். மாவு உருண்டைக்குள் வெடிமருந்துகள் வைத்து இவை தயாரிக்கப்படுகின்றன.
வெடிமருந்து வாசனை வராமல் இருப்பதற்காக, சர்க்கரைப் பாகில் ஊறவைக்கப்படும். அப்போது அவை பார்ப்பதற்கு மென்மையான, வட்ட வடிவ இனிப்புகளான ரசகுல்லாக்களைப் போலவே தோற்றமளிக்கின்றன.
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து, இந்த சம்பவத்திற்கு காரணமாக இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தின் உண்மையான நோக்கம் கொலை செய்வதா அல்லது விளையாட்டாக செய்யப்பட்டதா என்பது விசாரணையில்தான் தெரியவரும் என காவல் அதிகாரி ரேகா சிங் என்பவர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து ராம்பகத் அந்த வெடிகுண்டை எவ்வாறு பெற்றார், எதற்காக ராஜேந்திராவிடம் கொடுத்தார் என்பது குறித்து போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.