கர்நாடகாவில் 2028-ல் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அம்மாநில முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார். மாண்டியா மாவட்டத்தில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சி ஒன்றில் இதுதொடர்பாக பேசிய சித்தராமையா கூறியிருப்பதாவது;
“இன்று அரசியல் களம் சீர்கெட்டுவிட்டதால், 2028-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் நான் போட்டியிடப் போவதில்லை. இருப்பினும், அரசியலில் தொடர்ந்து செயல்பட்டு, மக்களின் துயரங்கள் மற்றும் மகிழ்ச்சிக்கான குரலாக நான் தொடர்ந்து ஒலிப்பேன்.
வருணா தொகுதி மக்கள் மீண்டும் தேர்தலில் போட்டியிடுமாறு என்னை வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், இனி எந்தத் தேர்தலிலும் போட்டியிடக் கூடாது என்று நான் முடிவு செய்துவிட்டேன். கடந்த காலங்களில் நான் தேர்தலில் போட்டியிட்டபோது, தொகுதி மக்களே எங்களுக்குத் தேவையான நிதியை வழங்கி எங்கள் வெற்றியை உறுதி செய்தனர்; ஆனால் இன்று அத்தகைய சூழல் இல்லை.
எனக்கு இப்போது 79 வயதாகிறது. காங்கிரஸ் அரசின் பதவிக்காலம் இன்னும் ஒன்றரை ஆண்டுகள் உள்ளது; அதற்குள் எனக்கு 81 அல்லது 82 வயதாகிவிடும். எனது உடல்நிலை முன்பு இருந்ததைப் போல வலுவாக இல்லை. முன்பிருந்த அதே உற்சாகத்துடன் தொடர்ந்து பணியாற்றுவது இனி சாத்தியமில்லை.
2028-ஆம் ஆண்டில் எனக்கு 82 வயது நிரம்பும். அது எனது அரசியல் வாழ்க்கையின் 50 ஆண்டுகளை நிறைவு செய்யும் தருணமாக அமையும். 1978-இல் தாலுகா வாரிய உறுப்பினராக எனது அரசியல் பயணத்தைத் தொடங்கினேன். நான் வெற்றிகளையும் தோல்விகளையும் கண்டுள்ளேன்.
ஆனால், நான் நம்பிய கொள்கைகளுக்கு முரணாகச் செயல்படாமலும், எனது மனசாட்சிக்குத் துரோகம் இழைக்காமலும் இருந்ததில் எனக்கு மனநிறைவு உண்டு.
தேர்தலில் போட்டியிடுவதானால் மக்களுக்குப் பணம் கொடுக்க வேண்டிய சூழல் இன்று உருவாகியுள்ளது. இன்றைய அரசியல் முற்றிலும் ஊழல் மயமாகிவிட்டது. நேர்மையான அரசியலுக்கு இன்று இடமில்லாத நிலை காணப்படுகிறது. இத்தகைய சூழலில், இனிவரும் தேர்தல்களில் போட்டியிட வேண்டாம் என்ற முடிவை நான் எடுத்துள்ளேன்.
ஐந்து தசாப்தங்களாக, கர்நாடக மக்கள் என்னை தங்களில் ஒருவராகக் கருதி அன்புடன் வழிநடத்தி வந்துள்ளனர். அந்த நன்றிக்கடன் என்மீது உள்ளது. எனவே, எனது எதிர்கால வாழ்க்கையும் பொதுச் சேவைக்கே அர்ப்பணிக்கப்படும்.” என தெரிவித்துள்ளார்.