பாஜக மாநிலங்களவை எம்.பி ராகவ் சதா பெயர் பஞ்சாப் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஏப்ரலில் ஆம் ஆத்மியில் இருந்து பாஜகவுக்கு தாவியவர் மாநிலங்களவை எம்.பி ராகவ் சதா. பஞ்சாபை சேர்ந்தவர் இவர்.
அங்கு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நடைபெற்று வரும் நிலையில் ராகவ் சதாவின் பெயர் பட்டியலில் இருந்து நீக்கப்படுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
2022 இல் ஆம் ஆத்மி சார்பில் பஞ்சாபில் இருந்து மாநிலங்களவைக்கு ராகவ் சதா தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஆம் ஆத்மியில் இருந்தபோது ராகவ் சதா கட்சியின் நிலைப்பாட்டை அவையில் எதிரொலிக்கவில்லை என கூறி அவரின் மாநிலங்களவை எம்.பிக்கள் குழு துணை தலைவர் பதவியை பறித்தது ஆம் ஆத்மி.
எனவே அதிருப்தி அடைந்த அவரும் ஸ்வாதி மலிவால் உள்ளிட்ட மேலும் 6 ஆம் ஆத்மி அதிருப்தி எம்பிக்களும் பாஜகவில் இணைந்தனர்.
ஒரு காலத்தில் பிரதமர் மோடி மற்றும் பாஜகவை தீவிரமாக விமர்சித்து வந்த ராகவ் சதா தற்போது தலைகீழாக ஆதரித்து வருகிறார்.
பஞ்சாபில் வாக்களர் பட்டியல் தீவிர திருத்த பணி நடந்து வரும் சூழலில், அவர் பஞ்சாபில் இருந்து நிரந்தரமாக குடிபெயர்ந்து சென்றுவிட்டதாக கூறி அவரின் பெயரானது நீக்கப்பட்டுள்ளது
கடந்த ஆகஸ்ட் 13 வெளியான வரைவு பட்டியலில் இடம்பெயர்ந்தவர்கள் லிஸ்டில் அவர் பெயர் உள்ளது. நிரந்தரமாக இடம்பெயர்ந்தவர் என அவரின் பெயர் நீக்கத்திற்கு காரணம் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவருடன் 20.66 லட்சம் பேரின் பெயர்கள் வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து சிறப்பு தீவிர திருத்தம் மூலம் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. இது பஞ்சாப் மொத்தம் வாக்காளர்கள் சதவீதத்தில் 9.7 சதவீதம் ஆகும்.
பஞ்சாபில் முதல்வர் பகவந்த் மான் தலைமையில் ஆம் ஆத்மி அரசு நடந்து வரும் நிலையில் வரைவு பட்டியலில் தனது பெயர் நீக்கப்பட்டதற்கு ஆம் ஆத்மி மீது ராகவ் சதா குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்ட ராகவ் சதா, "இது சாதராண அலுவல் பிழையாக தெரியவில்லை. இது அரசியல் பழிவாங்கல்.
ஊழல் நிறைந்த ஆம் ஆத்மியில் இருந்து நான் விலகியதில் இருந்தே என்மீது அதன் தலைமை ஆத்திரத்தால் வயிறெரிந்துகொண்டிருக்கிறது.
கட்சியில் இருந்து விலகியவர்களை பழிவாங்க தனக்கு இருக்கும் மாநில அரசு நிர்வாக அதிகாரத்தை ஆம் ஆத்மி பயன்படுத்தி வருகிறது" என குற்றம்சாட்டியுள்ளார்.
தனது பெயர் பஞ்சாபின் மொஹாலி தொகுதி வாக்காளர் பட்டியலில் இருந்ததாவும், மக்கள் பிரதிநிதிகளுக்கு எஸ்ஐஆர் விதிமுறைகளில் வழங்கப்பட்டிருந்த சிறப்பு பாதுகாப்பு மீறப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இது வரைவு பட்டியல் மட்டுமே ஆகும். இதில் ஆட்சேபனை தெரிவிக்க செப்டம்பர் 12 வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த தவறை சரிசெய்ய ஆவன செய்ய உள்ளதாக ராகவ் சதா மேலும் தெரிவித்துள்ளார்.
அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தலை சந்திக்க உள்ள பஞ்சாபில் இறுதி வாக்காளர் பட்டியல் வரும் அக்டோபர் மாதம் வெளியாகும்.