பிரிக்ஸ் மாநாட்டில் கலந்துகொள்ள வந்துள்ள சீன அதிபரிடம் பிரதமர் மோடி இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.
2019 இல் சீன வீரர்கள் கல்வான் பள்ளத்தாக்கில் எல்லைக் கட்டுப்பாடு கோட்டை அத்துமீறி கடந்து நடத்திய தாக்குதலில் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர்.
இதன் பின் சிக்கலில் இருந்த சீனாவுடனான உறவை பிரதமர் மோடி புதுப்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
அதன் ஒரு பகுதியாக 7 ஆண்டுகள் கழித்து இந்தியா வருகை தந்துள்ளார் சீன அதிபர் ஜி ஜின்பிங். இன்றும் நாளையும் டெல்லியில் நடக்கும் 18வது பிரிக்ஸ் மாநாட்டில் அவர் கலந்துகொண்டுள்ளார்.
அவருடன் பிரதமர் மோடி இன்று இருதரப்பு பேச்சுவார்தையையும் நடத்தி உள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் ஏற்பட்டுள்ள சீரான முன்னேற்றத்தை இரு தலைவர்களும் வரவேற்றதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சந்திப்பின் போது பேசிய பிரதமர் மோடி, "இரு நாடுகளுக்கும் இடையிலான வேறுபாடுகள் மற்றும் முரண்பாடுகள் ஒருபோதும் மோதல்களாக மாறக் கூடாது" என்று சுட்டிக்காட்டினார்.
இருதரப்பு உறவுகளுக்கு பரஸ்பர மரியாதை, பரஸ்பர உணர்திறன், மற்றும் பரஸ்பர நலன் ஆகிய மூன்று முக்கிய கோட்பாடுகள் வழிகாட்டியாக இருக்க வேண்டும் எனப் பிரதமர் வலியுறுத்தினார்.
எல்லைப் பகுதிகளில் அமைதியும் நிலைத்தன்மையும் நிலவுவதே இருதரப்பு உறவுகளின் தொடர்ச்சியான வளர்ச்சிக்கு அவசியமான அடிப்படை என்பதைப் பிரதமர் மோடி சுட்டிக்காட்டினார்.
எல்லை விவகாரம் தொடர்பாக ஏற்கனவே உள்ள ஒப்பந்தங்கள் மற்றும் புரிதல்களை இரு நாடுகளும் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
எல்லைப் பிரச்சினைக்கு நியாயமான, தாரபூர்வமான மற்றும் இரு தரப்பும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு தீர்வை எட்டுவதில் இரு தலைவர்களும் தங்களது உறுதியை வெளிப்படுத்தினர்.
இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவுகள் குறித்தும் இருவரும் பேசினர். வர்த்தக சமனின்மை மற்றும் விநியோகச் சங்கிலிச் சிக்கல்கள் ஆகியவற்றை இரு தரப்பும் பரஸ்பரம் தீர்க்க வேண்டும் என்பதில் இருவரும் உடன்பட்டனர்.
இரு நாடுகளின் வர்த்தகங்களுக்கும் முறையான சந்தை அணுகலை வழங்குவது அவசியம் என ஒப்புக்கொள்ளப்பட்டது.
இந்தியா-சீனா இடையிலான இருதரப்பு உறவுகளை மீண்டும் சீரமைக்கும் நோக்கில் இந்த சந்திப்பு மிக முக்கியமான நகர்வாக பார்க்கப்படுகிறது.