இந்தியா

அமித் ஷா பேச்சுக்கும் மசோதாவிற்கும் முரண்பாடு ஏன்?- தொகுதி மறுவரையறை விவகாரத்தில் கனிமொழி கேள்வி

மக்கள்தொகை கட்டுப்பாட்டில் சிறந்து விளங்கும் தமிழ்நாட்டை தண்டிக்காதீர் என்று கனிமொழி கூறினார்.

தொகுதி மறுவரையறை உள்பட 3 மசோதாக்கள் மீதான விவாதத்தில் திமுக எம்பி கனிமொழி உரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள தொகுதி மறுவரையறை மசோதா ஜனநாயகத்தின் மீதான மிகப்பெரிய தாக்குதல்.

மாநில அரசுகளுடன் கலந்தாலோசித்து தொகுதி மறுவறையறையை கொண்டு வராதது ஏன்?

மத்திய அமைச்சர் அமித் ஷா பேசுவது ஒன்றாகவும் ஆனால் மசோதாவில் இருப்பது வேறொன்றாகவும் இருக்கிறது.

50 சதவீதம் உயர்வு என்ற அடிப்படையில் தொகுதி மறுவரையறை என்கிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா.

மசோதாவில் கடைசியாக எடுக்கப்பட்ட மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை என்று இருக்கிறது.

அனைத்து துறைகளிலும் வளர்ச்சியடைந்த தமிழ்நாடு தொகுதி மறுவரையறையால் ஏன் பாதிக்கப்பட வேண்டும்?

மத்திய உள்துறை அமைச்சரின் பரிந்துரையை தொகுதி மறுவறையறை குழு ஏற்காவிட்டால் என்ன நடக்கும்?

2011 மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்தால் தமிழ்நாடு பாதிக்கப்படும், 11 இடங்கள் குறையும்.

எம்பிக்களின் எண்ணிக்கையை அதிகரித்தால் நாடாளுமன்றத்தில் அனைத்து எம்பிக்களும் பேச கூட நேரம் கிடைக்காது.

தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் தேர்தல் நடைபெறுவதால் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரை 2 வாரத்திற்கு ஒத்திவைக்க கோரினோம்.

2 வாரங்கள் கூட காத்திருக்க முடியாமல் மசோதாக்களை கொண்டு வந்துள்ளீர்கள்?

எம்.பி.க்கள் எண்ணிக்கை 850-ஆக உயர்த்தினால், தென் மாநிலங்களில் இருந்து ஒரு வாக்குக் கூட இல்லாமல் 3ல் 2 பங்கு பெரும்பான்மை மூலம் அரசியலமைப்பை |திருத்த முடியும். தெற்கின் அனுமதி இல்லாமல் நாட்டின் அரசியல் அடிப்படையையே மாற்ற முடியும்.

மகளிர் இட ஒதுக்கீட்டை தொகுதி மறுவரையறை மசோதாவோடு இணைப்பது ஒரு அரசியல் பொறி.

அரசியலமைப்பு 334A பிரிவை திருத்தி, மகளிர் | இட ஒதுக்கீட்டை ஏன் தொகுதி மறுவரையறையில் இருந்து பிரிக்க மறுக்கிறீர்கள்? சுழற்சி முறையில் 543 எம்.பி.க்களில் 3ல் ஒரு பங்கை மகளிருக்கு ஒதுக்குவதில் என்ன சிக்கல்?

எம்.பி.க்கள் எண்ணிக்கை 850 ஆக உயரும் போது, எதிர்காலத்தில் தென் மாநிலங்களில் இருந்து ஒரு வாக்கு கூட இல்லாமல் அரசியல் சாசனத்தை திருத்திவிட முடியும்.

குடியரசுத் தலைவரைத் தேர்வு செய்வதில் கூட, தெற்கு மாநிலங்களுக்கு பங்களிப்பே இருக்காது.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.