நாடாளுமன்றத்தில் 3 நாள்.சிறப்பு கூட்டத்தொடர் இன்று (ஏப்ரல் 16) தொடங்கியது.
மகளிர்க்கு 33 சதவீத இடஒதுக்கீடு சட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக தொகுதி மறுவரையறை செய்வது குறித்த அரசியல் சட்ட திருத்தங்கள் இன்று மக்களவையில் முன்மொழியப்பட உள்ளது.
அரசியலமைப்பு சட்டம் 131-வது திருத்த மசோதா 2026, தொகுதிகள் மறுவரையறை மசோதா 2026, மற்றும் யூனியன் பிரதேசங்களின் சட்டங்கள் திருத்த மசோதா 2026 ஆகிய 3 மசோதாக்கள் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளன.
மகளிருக்கு 280 இடங்களை ஒதுக்கும் வகையில் நாடாளுமன்ற மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை 850 ஆக உயர்த்தி தொகுதி மறுவரையரை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
மக்களவையில் மசோதா குறித்து பாஜக தரப்பில் இருந்து சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வாலிடம் இருந்து விவாதம் தொடங்கும்.
எம்.பி.க்கள் பன்சூரி ஸ்வராஜ், ரக்ஷா கட்சே, அபராஜிதா சாரங்கி, கங்கனா ரனாவத் மற்றும் தர்மஷிலா குப்தா ஆகியோர் பேச உள்ளனர். பிற்பகல் 3 மணி தொடங்கி 3.30க்குள் பிரதமர் மோடி மக்களவையில் பேச உள்ளார்.
இதற்கிடையே சிறப்புக் கூட்டத்தொடருக்கான வியூகம் குறித்து விவாதிப்பதற்காக எதிர்க்கட்சித் தலைவர்கள் காங்கிரஸ் தலைவர் கார்கே தலைமையில் நாடாளுமன்ற வளாகத்தில் கூடி விவாதித்தனர்.
மசோதா நிறைவேறுமா?
இந்த மசோதா நிறைவேற வேண்டுமானால், அவையில் இருப்பவர்களில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவு தேவை.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்.பி.க்கள் 298 பேர் மசோதாக்களுக்கு ஆதரவாக வாக்களிப்பார்கள். இதில் தென் மாநிலமான ஆந்திர பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசத்தை சேர்ந்த 16 எம்.பி.க்கள் அடங்குவர்.
235 - 238 எம்.பி.க்கள் காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகளின் கூட்டணி பக்கம் உள்ளனர். பெண்கள் இடஒதுக்கீட்டை ஆதரித்தாலும் அதன் போர்வையில் தொகுதி மறுவரையரை செய்வதை அவர்கள் தீவிரமாக எதிர்க்கின்றனர்.
2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தொகுதி மறுவரையரை முறையல்ல என்றும் குற்றம் சாட்டுகின்றனர்.
எனவே அவர்கள் மசோதாக்களை எதிர்த்து வாக்களிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
காங்கிரஸ் (98), சமாஜ்வாதி (37), திரிணாமுல் காங்கிரஸ் (28), திமுக (22), உத்தவ் சிவசேனா (9), சரத் பவார் தேசியவாத காங்கிரஸ் (8) மற்றும் பிற கட்சிகள் இதில் அடங்கும்.
இருப்பினும் என்டிஏ கூட்டணிக்கு பெரும்பான்மை உள்ளதால் மசோதாக்கள் மக்களவையில் நிறைவேறும் என்றே கணிக்க முடிகிறது.