நாக்பூர் சட்டமேலவை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் 11 இடங்களுக்கும், பீகாரில் 8 இடங்களுக்கும், கர்நாடகாவில் 4 இடங்களுக்கும், மகாராஷ்டிராவில் 5 இடங்களுக்கும் கடந்த அக்டோபர் 23 அன்று சட்ட மேலவை தேர்தல் நடந்தது.
நேற்று வாக்குப்பதிவு எண்ணப்பட்ட நிலையில் ஆர்எஸ்எஸ் கோட்டையாக விளங்கும் மகாராஷ்டிராவின் பட்டதாரிகள் தொகுதியில், காங்கிரஸ் வேட்பாளர் அபிஜித் கோவிந்தராவ் வஞ்சாரி தொடர்ந்து இரண்டாவது முறையாக வெற்றி பெற்றுள்ளார்.
அவர் பாஜகவின் சுதாகர் கோலியை 3,271 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். நீண்ட நேர வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸின் சொந்த ஊரும், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களவைத் தொகுதியுமான நாக்பூரில் காங்கிரஸின் வெற்றி அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
ஆர்.எஸ்.எஸ் தலைமையகமும் நாக்பூரில்தான் அமைந்துள்ளது. இந்நிலையில் அங்கு அபிஜித் கோவிந்தராவ் வஞ்சாரி வெற்றி பாஜகவுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. கர்நாடகாவின் 4 இடங்கள் உட்பட சட்டமேலவை தேர்தலில் போட்டியிட்ட பெரும்பாலான இடங்களில் பாஜக வென்ற நிலையில் இங்கு தொற்றுள்ளது.
வழக்கறிஞரும் கல்வியாளருமான வஞ்சாரி, 2020ல் நாக்பூர் பட்டதாரிகள் தொகுதியிலிருந்து முதல் முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இம்முறையும் அவர் காங்கிரஸ் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். காங்கிரஸ், சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆகியவற்றின் கூட்டணியான மகா விகாஸ் அகாடிஅவருக்கு ஆதரவளித்தது. இத்தொகுதியில் மொத்தம் 38 வேட்பாளர்கள் போட்டியிட்ட நிலையில் அவர் வெற்றி பெற்றுள்ளார்.
"பாஜக தனது முழு பலத்தையும் பயன்படுத்தியது. அவர்களின் தலைவர்கள் அனைவரும் நாக்பூரில் இருந்தனர். இருந்தபோதிலும், வாக்காளர்கள் எங்களுக்கு ஆதரவளித்தனர்," என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே அங்கு வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுக்கொண்டிருந்த மங்காபூர் உள் அரங்கத்திற்கு வெளியே பாஜக மற்றும் காங்கிரஸ் தொண்டர்களிடையே மோதல்கள் வெடித்தன. காவல்துறை தலையிட்ட பின் நிலைமை கட்டுக்குள் வந்தது.