பிரதமர் மோடியின் பிறந்தநாள் நிகழ்ச்சியைப் புறக்கணித்த மாணவருக்கு அபராதம் விதிப்பதா என காங்கிரஸ் கட்சி சாடியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாள் கடந்த 17-ம் தேதி நாடு முழுதும் கொண்டாடப்பட்டது.
இந்நிலையில், ஜம்முவில் உள்ள ஐ.ஐ.எம். கல்வி நிறுவனத்தில் பிரதமர் மோடியின் பிறந்தநாள் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
இந்நிலையில், பிரதமர் மோடியின் பிறந்தநாளில் விளக்கேற்றும் நிகழ்ச்சியைப் புறக்கணித்த மாணவர்களிடம் எழுத்துப்பூர்வ விளக்கம் கேட்கப்பட்டுள்ளது என்றும், தவறினால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் எனவும் மாணவர் பேரவை நோட்டீஸ் அனுப்பி உள்ளது என காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை எம்.பி. சையத் நசீர் உசேன் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், பிரதமர் மோடியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் மாணவர்கள் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என்று ஏன் வலியுறுத்தப்பட வேண்டும்?
இது ஐஐஎம் போன்ற கல்வி நிறுவனங்களில் ஒரு கல்விசார் கடமையா அல்லது பிரதமர் மோடிக்கான விளம்பர நடவடிக்கையை வளாகத்திற்குள் கட்டாயமான ஒன்றாகக் கொண்டு வந்துள்ளார்களா?
கல்வி நிறுவனங்கள் மாணவர்களிடம் சுதந்திரமான சிந்தனையை வளர்க்க வேண்டுமே தவிர, அரசியல் தலைவர்களின் கொண்டாட்டங்களில் பங்கேற்க அவர்களைக் கட்டாயப்படுத்தவோ அல்லது தண்டனை வழங்குவதாக மிரட்டவோ கூடாது.
பா.ஜ.க.வின் விளம்பர உத்திகள் நமது உயர்தரக் கல்வி நிறுவனங்களுக்கு வெளியே வைக்கப்பட வேண்டும் என தெரிவித்தார்.
இந்தக் குற்றச்சாட்டை ஐ.ஐ.எம். நிர்வாகம் மறுத்துள்ளது. இதுகுறித்து ஜம்மு ஐ.ஐ.எம். மாணவர் நலத்துறை தலைவர் பிரிகேடியர் நீரஜ் சோனி கூறுகையில், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி போன்ற நாட்களில் மாணவர்களின் பங்கேற்பை உறுதி செய்யவே இதுபோன்ற இயல்பானநடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. எந்த ஒரு மாணவருக்கும் அபராதம் விதிக்கப்படவில்லை என விளக்கம் அளித்தார்.