வாக்காளர் பட்டியலின் சிறப்புத் தீவிர திருத்தம் (SIR) குறித்து நாடாளுமன்றத்தில் விவாதக்க தயாரா? என சவால் விடுத்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு காங்கிரஸ் பதிலடி கொடுத்துள்ளது.
எஸ்ஐஆர் மற்றும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்பாடு தொடர்பான தேர்தல் முறைகேடுகள் குறித்த குற்றச்சாட்டுகள் பற்றி நாடாளுமன்றத்தில் விவாதிக்க வருமாறு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு அமித் ஷா சவால் விடுத்திருந்தார்.
இந்நிலையில் காங்கிரஸின் தகவல் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் அமித் ஷாவுக்கு பதில் சவால் விடுத்துள்ளார்.
அவர் தனது எக்ஸ் பதிவில், "நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டு 82 நாட்கள் கடந்தபோதிலும், அது இன்னும் அதிகாரப்பூர்வமாக முடிவடையவில்லை.
இதற்குக் காரணம், மக்களவையில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பயன்படுத்தி, தொகுதி மறுவரையறை மசோதாக்களை நிறைவேற்றுவதற்காக ஒரு சிறப்பு கூட்டத்தொடரைக் கூட்டுவது குறித்து உள்துறை அமைச்சர் இன்னும் திட்டமிட்டுக்கொண்டிருப்பதுதான்.
முன்மொழியப்பட்ட மசோதாக்களில் என்னென்ன அம்சங்கள் உள்ளன என்பதை அரசு இன்னும் வெளியிடவில்லை. ஆனால், 2029ல் பாஜக சந்திக்கவிருக்கும் பெரும் தோல்வியிலிருந்து அக்கட்சியை காப்பாற்றுவதே இதன் நோக்கம் என்பது தெளிவாகத் தெரிகிறது.
தொகுதி மறுவரையறை முன்மொழிவுகள் குறித்து முழுமையாக விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட அமித் ஷாவுக்கு ஏன் தைரியம் இல்லை?
தன்னை சாணக்கியர் என்று அழைத்துக்கொள்ளும் அமித் ஷா, பொய் வாக்குறுதிகளை அளிப்பதிலும் தற்பெருமை பேசுவதிலும் கைதேர்ந்தவர். இப்போது அவரே, வாக்கு மோசடி குறித்து விவாதிக்க ஒரு சிறப்பு அமர்வைக் கூட்டத் தயார் என்று கூறுகிறார்
கடந்த ஆண்டு, எதிர்க்கட்சிகள் அனைத்தும் இணைந்து 'வாக்காளர் பட்டியல் திருத்தம்' குறித்து விவாதிக்கக் கோரியபோது, அது தேர்தல் ஆணையத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது என்று கூறி அவர் அதை மறுத்துவிட்டார்.
'வாக்குத் திருட்டு' குறித்து சிறப்பு கூட்டத்தொடரை நடத்த உள்துறை அமைச்சருக்கு உண்மையிலேயே விருப்பம் இருந்தால், முதலில் அவர் தனது நம்பிக்கைக்குரிய ஆளாக செயல்படும் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரின் ராஜினாமாவைப் பெற வேண்டும். மேலும், வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளையும் அவர் நிறுத்தி வைக்க வேண்டும். " என்று சவால் விடுத்துள்ளார்.
நேற்று ஐதராபத்தில் நடைபெற்ற பாஜகவின் 'ஜனநாயகத்தைக் காப்போம், அராஜகத்தை ஒழிப்போம்' பேரணியில் உரையாற்றிய அமித் ஷா, குற்றச்சாட்டுகள் குறித்து விவாதிக்க நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட அரசு தயாராக இருப்பதாகக் கூறினார். அந்த விவாதத்தில் பங்கேற்க ராகுல் காந்திக்கு அவர் அழைப்பு விடுத்திருந்தார்.
முன்னதாக, நேற்று முன் தினம் டெல்லியில் நடைபெற்ற இந்தியக் கூட்டணியின் பேரணியை 'ஊடுருவல்காரர்களைக் காப்பாற்றும் பேரணி' என்று அமித் ஷா விமர்சித்திருந்தார்.
வங்கதேச ஊடுருவல்காரர்களை பாதுகாப்பதற்காக, எஸ்ஐஆர் செயல்முறையை தடுக்க காங்கிரஸ் முயற்சிப்பதாக அமித் ஷா குற்றம் சாட்டியிருந்தார்.
மேலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் குறைபாடு இருந்தால், தெலங்கானா போன்ற மாநிலங்களில் காங்கிரசால் எப்படி ஆட்சி அமைக்க முடிந்தது என்றும் அவர் கேட்டிருந்தார்.