சித்து 
இந்தியா

அவமதிப்பு செய்யும் குற்றவாளிகளை பொது இடத்தில் தூக்கிலிட வேண்டும்: சித்து

பஞ்சாப் மாநிலத்தில் இரண்டு இடங்களில் சீக்கியர்களை அவமதிக்கும் வகையிலான சம்பவங்களுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள பொற்கோவிலில் நுழைந்த வாலிபர் ஒருவர், சீக்கியர்களின் புனித நூல் மற்றும் வாள் ஆகியவற்றை அவமதிக்க முயன்றதாக, அங்குள்ளவர்கள் அவரை பிடித்து அடித்து உதைத்தனர். இதில் அந்த வாலிபர் உயிரிழந்தார்.

அதேபோல், நிஜாம்பூர் கிராமத்தில் உள்ள கோவிலுக்குள் நுழைந்த ஒருவர் சீக்கியர்களின் கொடியான நிஷான் சாகிப்பை அகற்ற முயன்றுள்ளார். இவரையும் பிடித்து அடித்து உதைத்தில் உயிரிழந்தார்.

அடுத்தடுத்து இரண்டு சம்பவங்களில் இருவர் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளனர். சீக்கியர்களின் புனித நூல், புனித இடங்களுக்கு இழுக்கு சேர்க்கும் வகையில் இந்த சம்பவங்களுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஆனால், இருவர் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து அரசியல் கட்சிகள் வாய் திறக்கவில்லை.

பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த வருடம் தொடக்கத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நேரத்தில் வாய் திறந்தால் தேர்தலில் பாதிப்பு ஏற்படும் என்ற அச்சத்தில் அமைதியாக இருக்கின்றன.

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சிக்கான பஞ்சாப் மாநில தலைவர் நவ்ஜோத் சித்து, அவமதிப்பு செயலில் ஈடுபடும் குற்றவாளிகளை பொது இடத்தில் தூக்கிலிட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

மலேர்கோட்லா என்ற இடத்தில் சித்து நேற்று பேரணியில் கலந்து கொண்டார் அப்போது ‘‘மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் இழிவு செயலில் ஈடுபடும் நபர்களை பொது இடத்தில் தூக்கிலிட வேண்டும். இதுபோன்ற செயல் ஒரு சமூதாயத்திற்கு எதிரான சதி. பஞ்சாபில் அமைதியை சீர்குலைக்க அடிப்படைவாத சக்திகள் முயற்சி செய்து கொண்டிருக்கின்றன’’ என்றார்.

SCROLL FOR NEXT