இந்தியா

எஸ்.ஜானகியின் மறைவுக்கு காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி இரங்கல்

பாடகி ஜானகி உடலுக்கு பொதுமக்கள், ரசிகர்கள் என பலரும் திரண்டு அஞ்சலி.

தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்திய உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ள பாடகி எஸ்.ஜானகி அம்மாள் தனது 88 வயதில் வயது மூப்பு காரணமாக நேற்று இயற்கை எய்தினார்.

மைசூரு மகாராஜா கல்லூரி மைதானத்தில் வைக்கப்பட்ட பாடகி ஜானகி உடலுக்கு பொதுமக்கள், ரசிகர்கள் என பலரும் திரண்டு அஞ்சலி செலுத்தினர்.

கர்நாடகா மாநிலம் மைசூரில் இசை அரசி எஸ்.ஜானகியின் இறுதி ஊர்வலம் தொடங்கியது. எஸ்.ஜானகியின் உடல் பண்ணை இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு அடக்கம் செய்யப்படுகிறது.

இந்நிலையில், எஸ்.ஜானகியின் மறைவுக்கு காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

தென்னிந்தியாவின் நைட்டிங்கேல் என அழைக்கப்பட்ட எஸ். ஜானகி ஜியின் மறைவால் ஆழ்ந்த வருத்தம் அடைகிறேன்.

பல தலைமுறை இந்தியர்களுக்கு, அவரது குரல் அன்பு, பக்தி, மகிழ்ச்சி மற்றும் ஏக்கத்தின் இசையாக விளங்கியது. அபாரமான நளினத்துடன் பல மொழிகளில் பாடி, இசை எனும் உலகளாவிய மொழியின் மூலம் பிராந்தியங்களைக் கடந்து மக்களை அவர் ஒன்றிணைத்தார்.

அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் கோடிக்கணக்கான அபிமானிகளுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.