இந்தியா

சித்தராமையாவை பதவிவிலக கோரும் காங்கிரஸ் தலைமை? புதிய முதலமைச்சராக பதவியேற்கும் டி.கே.சிவக்குமார்?

நீண்டநாட்களாகவே சித்தராமையா - டி.கே.சிவக்குமார் இடையே அதிகார மோதல் நிலவிவருகிறது.

கர்நாடக முதலமைச்சர் பதவியிலிருந்து சித்தராமையா விலக வேண்டும் என்று காங்கிரஸ் மேலிடம் அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தற்போதைய துணை முதலமைச்சரான டி.கே.சிவக்குமார் புதிய முதலமைச்சராகப் பதவியேற்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.

டி.கே. சிவகுமார் 3-4 மாதங்களுக்கு முன்பே துணை முதலமைச்சர் பதவிக்கான தனது ராஜினாமா கடிதத்தை காங்கிரஸ் மேலிடத்திற்கு அனுப்பிவிட்டதாகவும், இதனால் காங்கிரஸ் இந்த விவகாரத்தில் விரைவான முடிவை எடுக்கவேண்டும் எனவும் கர்நாடக கட்சி நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

காங்கிரஸ் தேசியத் தலைமை, முதலமைச்சர் சித்தராமையா மற்றும் துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் ஆகியோரை டெல்லிக்கு அவசரமாக அழைத்து தீவிர ஆலோசனைகளை நடத்தியுள்ள நிலையில் இந்த தகவல் வெளியாகி உள்ளது. இந்த கூட்டத்தில் ஆட்சி மாற்றம் மற்றும் அதிகாரப் பகிர்வு குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

சித்தராமையா தனது பதவியை விட்டுத்தர நிபந்தனைகளை விதித்து வருவதாகவும், டி.கே.சிவக்குமார் ஆதரவாளர்கள் தீவிரமாக களம் இறங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.