இந்தியா

தற்போதைய 543 இடங்களில் 33% செயல்படுத்த தயாரா?- பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் சவால்

மோடி ஜி எத்தனை தடைகளை ஏற்படுத்தினாலும் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை உறுதி செய்வதில் காங்கிரசும் அதன் தலைவர்களும் உறுதியாக உள்ளனர்.

பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு மக்களவையில் பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு (மக்களவை மற்றும் மாநில சட்டமன்ற உறுப்பினர்களில் எண்ணிக்கை) வழங்கும் வகையில் அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதாவை கடந்த 16-ந்தேதி கொண்டு வந்தது. இந்த மசோதாவிற்கு மூன்றில் இரண்டு பங்கு எம்.பி.க்களின் ஆதரவு கிடைக்காமல் தோல்வியடைந்தது.

2029 மக்களவை தேர்தலின்போது இந்த இடஒதுக்கீடு வழங்கப்படுவதற்கான இந்த மசோதா தோல்வியடைந்த நிலையில் காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகளை பிரதமர் மோடி கடுமையாக விமர்சித்தார்.

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் ராகிணி நாயக் பிரதமர் மோடிக்கு சவால் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக ராகிணி நாயக் கூறியதாவது:-

மோடி அவர்களே, உங்களுக்கு இன்னும் ஒரு வாய்ப்பு உள்ளது. பெண்களுக்கு எதிரான உங்கள் பிம்பத்தை நீங்கள் உண்மையாகவே மேம்படுத்த விரும்பினால், தற்போதுள்ள 543 தொகுதிகளில் பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற காங்கிரஸின் கோரிக்கையை ஏற்றுக்கொள்வீர்களா?.

இந்த சட்டம் வரவிருக்கும் மழைக்கால கூட்டத் தொடரிலேயே அமல்படுத்தப்பட வேண்டும். மேலும், பிற்படுத்தப்பட்ட வகுப்புகளைச் சேர்ந்த பெண்களுக்கும் இதில் மூன்றில் ஒரு பங்கு இடஒதுக்கீடு கிடைக்க வேண்டும்.

மோடிஜி எத்தனை தடைகளை ஏற்படுத்தினாலும், எத்தனை நிபந்தனைகளை விதித்தாலும், பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை உறுதி செய்வதில் காங்கிரசும் அதன் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் தலைவர்கள் ராகுல், பிரியங்கா காந்தி ஆகியோரும் உறுதியாக உள்ளனர்.

இச்சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் தோற்கடிக்கப்படவில்லை என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். 'நாரி சக்தி வந்தன் அதினியம்' (Nari Shakti Vandan Adhiniyam) 2023-ம் ஆண்டில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இன்றும் அது சட்டமாகவே நீடிக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி அதனைச் செயல்படுத்த அனுமதிக்கவில்லை என்பது மட்டுமே இங்குள்ள நிலை.

மோடி அரசாங்கம் கடந்த மூன்று ஆண்டுகளாகப் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை நிறுத்திவைத்துவிட்டு உறங்கிக்கொண்டிருந்தது; ஆனால் திடீரென, தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கத் தேர்தல்களுக்கு இடையே, தனது உறக்கத்திலிருந்து விழித்தெழுந்து ஒரு சிறப்புக் கூட்டத்தொடரைக் கூட்டியது.

தெற்கு, வடகிழக்கு மற்றும் சிறிய மாநிலங்களின் பங்கை, அல்லது தலித், பழங்குடியின மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த பெண்களின் பங்கை திருடும் வகையிலான தொகுதி மறுவரையறை நடவடிக்கையை காங்கிரஸ் அனுமதிக்காது.

இவ்வாறு ராகிணி நாயக் தெரிவித்தார்.