இந்தியா

பிரதமர் மோடியை என்னுடன் விவாதத்திற்கு சம்மதிக்க வையுங்கள்: அமித் ஷாவிடம் ராகுல் காந்தி வலியுறுத்தல்

பிரதமர் மோடியை தன்னுடன் வெளிப்படையான விவாதத்திற்கு வருமாறு ராகுல் காந்தி தொடர்ந்து சவால் விடுத்து வருகிறார்.

வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் செய்வது குறித்து, பிரதமர் நரேந்திர மோடியை குழப்ப வேண்டாம் என்றும், அதற்கு பதிலாக என்னுடன் வெளிப்படையான விவாதத்திற்கு அவரை சம்மதிக்க வைக்குமாறு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேட்டு கொண்டுள்ளார்.

வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்தை மறுஆய்வு செய்வது குறித்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் விவாதிக்க முடியாது என்று கடந்த ஆண்டு டிசம்பரில் அமித் ஷா நாடாளுமன்றத்தில் கூறியிருந்தார்.

ஆனால், அதே விவகாரம் குறித்து விவாதிக்க நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டத்தொடரை கூட்ட அரசு தயாராக இருப்பதாக அவர் நேற்று தெரிவித்தார். இந்த இரண்டு கருத்துகளையும் ஒப்பிட்டு காட்டும் காணொளி தொகுப்பு ஒன்றை ராகுல் காந்தி பகிர்ந்துள்ளார்.

இந்தியில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, "அமித் ஷா அவர்களே, மோடி அவர்களை குழப்பாதீர்கள். என்னுடன் வெளிப்படையான விவாதத்திற்கு அவரை சம்மதிக்க வையுங்கள். எந்த மேடையாக இருந்தாலும் சரி, எந்த நேரமாக இருந்தாலும் சரி!" என்று குறிப்பிட்டுள்ளார்.

எக்ஸ் தள பதிவு:

பிரதமர் மோடியை தன்னுடன் வெளிப்படையான விவாதத்திற்கு வருமாறு ராகுல் காந்தி தொடர்ந்து சவால் விடுத்து வருகிறார். பிரதமர் ஒரு தேசத்துரோகி என்பதை வெறும் ஐந்து நிமிடங்களில் நிரூபித்துக் காட்டுவேன் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

"மோடி அவர்களே, அதானிக்கு சொந்தமான என்.டி.டி.வி. (NDTV)-யிலேயே விவாதிப்போம் வாருங்கள். மேடை உங்களுடையது, நடுவரும் உங்களுடையவரே - அது அதானியாக இருந்தாலும் சரி அல்லது மோகன் பகவத் ஆக இருந்தாலும் சரி! நான் உறுதியளிக்கிறேன் - நரேந்திர மோடி ஒரு 'தேசத்துரோகி' என்பதை வெறும் 5 நிமிடங்களில் நிரூபித்துக் காட்டுவேன்," என்று 'எக்ஸ்' தளத்தில் ராகுல் காந்தி பதிவிட்டிருந்தார்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும், வாக்குகள் திருடப்படுவது குறித்து நாடு எழுப்பும் கேள்விகளுக்கு பதிலளிக்க பிரதமர் முன்வர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்றமே தகுந்த இடம்:

ராகுல் காந்தியின் இந்த சவாலை பா.ஜ.க. தலைவர்கள் ஏளனம் செய்துள்ளனர். விவாதத்திற்கான இடத்தை தேர்ந்தெடுக்கும் பொறுப்பை பிரதமரிடம் ராகுல் காந்தி ஒப்படைக்க முயல்வதை சுட்டிக்காட்டிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நாடாளுமன்றமே அதற்கான தகுந்த இடம் என்று கூறினார்.

மேலும், மக்களவை எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் ராகுல் காந்தி, பொறுப்புடனும் தீவிரத்தன்மையுடனும் நடந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் நினைவூட்டினார்.

SCROLL FOR NEXT