இண்டிகோ  
இந்தியா

பெங்களூருவில் தரையிறங்கும்போது இண்டிகோ விமானத்தின் வால் பகுதி தரையில் உரசியதால் பரபரப்பு

பலத்த காற்று காரணமாக தரையிறங்கும்போது, ​​ஓடுபாதையில் இயல்புக்கு மாறான முறையில் தரையிறங்கியதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

பலத்த காற்று காரணமாக இண்டிகோ விமானத்தின் வால் பகுதி தரையிறங்கும்போது தரையில் உரசிய சம்பவம் அரங்கேறியுள்ளது.

அசாமில் கௌஹாத்தியிலிருந்து பெங்களூரு வந்த இண்டிகோ விமானம் ஒன்று நேற்று கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் பலத்த காற்று காரணமாக தரையிறங்கும்போது, ​​ஓடுபாதையில் இயல்புக்கு மாறான முறையில் தரையிறங்கியதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

முதல் முயற்சியில் தரையிறங்கத் தவறிய அந்த விமானம், இரண்டாவது முயற்சிக்கு முன்பாக வானில் சில முறை வட்டமிட்டது. அதனைத் தொடர்ந்து தரையிறங்கியபோது, ​​விமானத்தின் பின்பகுதி ஓடுபாதையில் உரசியது.

ஆனால் இதனால் பாதிப்பு இல்லை என்றும் அனைத்துப் பயணிகளும் பணியாளர்களும் பாதுகாப்பாக உள்ளனர் எனவும் இண்டிகோ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பலத்த காற்று வீசியபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாகவும், வழக்கமான நடைமுறைகளின்படி சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

விமானம் தற்போது பராமரிப்பு சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும், தேவையான அனுமதிகளைப் பெற்ற பிறகு மீண்டும் இயக்கப்படவுள்ளதாகவும் அது தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT