கர்நாடகாவில் பேராசிரியருடன் கள்ள உறவு வைத்திருப்பதாகப் பொய்யாகக் குற்றம் சாட்டப்பட்டதால் மாணவி தற்கொலை செய்துகொண்ட அவலம் அரங்கேறி உள்ளது.
சித்ரதுர்கா மாவட்டம், ஹோலல்கெரே நகரைச் சேர்ந்த 23 வயதான லிகிதா, மல்லாடிஹள்ளியில் உள்ள ஆயுர்வேதக் கல்லூரியில் பி.ஏ.எம்.எஸ் படித்து வந்தார்.
கல்லூரியில் பேராசிரியர் ராஜு உடன் ஆசிரியர் என்ற முறையில் லிகிதா பழகி வந்துள்ளார். ஆனால் அவருடன் லிகிதாவுக்கு தகாத உறவு இருப்பதாக சக மாணவிகள் வதந்திகளை பரப்பி உள்ளனர்.
அன்றாடம் லிகிதா இதனால் மன உளைச்சலில் இருந்துள்ளார். அதை பெரிது படுத்தவேண்டாம் என பெற்றோர் கூறியும் லிகிதனால் சக மாணவிகள் ஏற்படுத்திய அவப்பெயரை தாங்கிக்கொள்ள முடியவில்லை.
இந்த சூழலில் நேற்று தனது இல்லத்தில் லிகிதா தற்கொலை செய்துகொண்டார். தற்கொலைக்கு முன் அவர் எழுதி வைத்த கடிதத்தில், தன்னை மன ரீதியாக துன்புறுத்திய சக மாணவிகள் பெயரை லிகிதா எழுதி வைத்துள்ளார்.
தற்கொலைக் கடிதத்தின் அடிப்படையில் பேராசிரியர் ராஜு மற்றும் தொடர்புடைய மாணவிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
[தற்கொலை எண்ணங்களில் இருந்து விடுபட உதவிக்கு தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].