திருவனந்தபுரம் அருகே தனியாக வசித்து வந்த கல்லூரி பேராசிரியை பூர்ணிமா பிரகாஷ் வீட்டுக்குள் பிணமாக கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. அவரது மரணத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கேரளம் மாநிலம் ஆலப்புழா பகுதியை சேர்ந்தவர் பூர்ணிமா பிரகாஷ்(வயது45). இவர் பல்கலைக்கழக கல்லூரியில் தத்துவவியல் துறை உதவி பேராசிரியராக பணியாற்றி வந்தார். பூர்ணிமாவுக்கு திருமணம் ஆகவில்லை. மேலும் நெருங்கிய உறவினர்கள் யாரும் இல்லை என்று கூறப்படுகிறது.
இதனால் திருவனந்தபுரம் அருகே உள்ள பூஜப்புரா சட்டியாரா லைன் பகுதியில் தனியாக வசித்து வந்தார். கடந்த சில நாட்களாக அவர் தொடர் விடுப்பில் இருந்துள்ளார். இதனால் கல்லூரிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்திருக்கிறார். விடுப்பு முடிந்தநிலையில் அவர் கல்லூரிக்கு வரவில்லை.
இதனால் பூர்ணிமாவை தேடி கல்லூரி ஊழியர்கள், அவர் தங்கியிருந்த வீட்டுக்கு வந்து பார்த்தனர். அப்போது பூர்ணிமா தங்கியிருந்த வீட்டுக்குள் இருந்து கடும் துர்நாற்றம் வந்தது. இதனால் சந்தேகமடைந்த கல்லூரி ஊழியர்கள், அதுகுறித்து பூஜப்புரா போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு பூர்ணிமா பிணமாக கிடந்தார். அவரது உடல் அழுகத்தொடங்கிய நிலையில் கிடந்தது. அதனை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
பூர்ணிமா எப்படி இறந்தார்? என்பது தெரியவில்லை. உடல் அழுக தொடங்கிய நிலையில் இருப்பதால், அவர் இறந்து 5 நாட்களுக்கு மேல் இருக்கும் என்று கருதப்படுகிறது. அவர் உடல்நலம் பாதித்து இயற்கையாகவே இறந்தாரா? தற்கொலை எதுவும் செய்து கொண்டாரா? அல்லது அவரது சாவுக்கு வேறு எதுவும் காரணமா? என்பது தெரியவில்லை.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தனியாக வசித்து வந்த கல்லூரி பேராசிரியை வீட்டுக்குள் இறந்துகிடந்த சம்பவம் திருவனந்தபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.