இந்தியா

‘Cockroach is Back’ - முடக்கிய வேகத்திலேயே மீண்டும் வந்த கரப்பான் பூச்சி கட்சி!

இளைஞர்களால் இயக்கப்படும் ஒரு முக்கிய அரசியல் நையாண்டி இயக்கமாக உருவெடுத்துள்ளது.

கடந்த இரு தினங்களாக இணையத்தில் புயலைக் கிளப்பிக்கொண்டிருந்த கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் எக்ஸ் கணக்கு இன்று இந்தியாவில் முடக்கப்பட்டது.

இந்நிலையில் முடக்கப்பட்ட சில மணிநேரங்களிலையே "கரப்பான் பூச்சி திரும்பிவிட்டது’ (Cockroach is Back) என்ற பெயரில் புதிய கணக்கைத் தொடங்கியுள்ளார் அந்த நையாண்டி இயக்கத்தின் நிறுவனர் அபிஜித் தீப்கே.

"கரப்பான்பூச்சிகள் ஒருபோதும் சாவதில்லை" என்ற வாசகத்துடன் இக்கணக்கு மீண்டும் தீவிரமாகியுள்ளது. மேலும் எக்ஸ் தளத்திற்குத் திரும்பிய ஒரு மணி நேரத்திற்குள், கரப்பான் பூச்சி கட்சி இரண்டு பதிவுகளை வெளியிட்டது.

அதில் “எங்களை ஒழித்துவிடலாம் என்று நினைத்தீர்களா? ஹாஹா” என்று ஒரு பதிவும், “அவர்கள் எங்களைத் தடுத்ததற்கான காரணம் இதுதான்” என பாஜகவின் இன்ஸ்டாகிராம் கணக்கிற்கும், கரப்பான்பூச்சி கட்சியின் கணக்கிற்கும் உள்ள பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையை ஒப்பிடும் ஸ்கிரீன்ஷாட்கள் பகிரப்பட்டு உள்ளன.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடங்கப்பட்ட நான்கு நாட்களுக்குள்ளேயே, இக்கட்சி ஆளும் பா.ஜ.க-வின் அதிகாரப்பூர்வ பக்கத்தைப் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கையை விட அதிக பின்தொடர்பவர்களை பெற்றநிலையில், இந்த முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

எக்ஸ் தளம் முடக்கப்படுவதற்கு முன்பாக, இக்கட்சியின் இன்ஸ்டாகிராம் பக்கம் வெறும் 4-5 நாட்களில் 10 மில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்பவர்களை கடந்தது.