ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ரஜோரி மற்றும் பூஞ்ச் மாவட்டங்களில் கனமழை பெய்தது. அதோடு மேகவெடிப்பு (cloudbursts) ஏற்பட்டு நிலச்சரிவு ஏற்பட்டு பலத்த சேதம் ஏற்பட்டது. இதனால் பலர் உயிரிழந்தனர். வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன.
இந்த நிலையில் ஜம்மு-காஷ்மீர் மாநில முதல்வர் பாதிக்கப்பட்ட இடத்தை அதிகாரிகளுடன் சென்று பார்வையிட்டார். பின்னர், சேதமதிப்புகளை மதிப்பிட்டு, சிறப்பு நிதி வழங்கும்படி பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வலியுறுத்துவேன் என்று உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
வெள்ள பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நிவாரணம், மறுவாழ்வு மற்றும் சீரமைப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்தபின், செய்தியாளர்களை சந்தித்தார்.
சில விஷயங்களை நம்மால் சுயமாக சமாளிக்க முடியும் என்றாலும், சீரமைப்பு பணிகளுக்கான முழுச் செலவையும் ஏற்கும் நிதித்திறன் ஜம்மு காஷ்மீரிடம் இல்லை என்பதே யதார்த்தம். கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்திற்குப் பிறகு, ஜம்மு காஷ்மீருக்காக மத்திய அரசு சுமார் 1400 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டத் தொகுப்பிற்கு ஒப்புதல் அளித்தது. இந்த முறையும், நாங்கள் ஒரு விரிவான திட்டத் தொகுப்பைத் தயாரித்து, மத்திய அரசின் உதவியைக் கோருவோம்.
வெள்ளம், திடீர் வெள்ளம் மற்றும் மேகவெடிப்பு ஆகியவை இயற்கை பேரிடர்களாகக் கருதப்படுகின்றன. எனவே, மத்திய அரசின் உதவியைக் கோருவதற்கு முன்னதாக இவை குறித்து தனியாக அறிவிப்பு ஏதும் வெளியிடத் தேவையில்லை. மறுசீரமைப்பு மற்றும் மறுவாழ்வுப் பணிகளுக்கு தேவையான நிதியுதவியைக் கோரும் வகையிலான முன்மொழிவு தயாரானதும், அதை நானே நேரில் சென்று பிரதமரிடம் சமர்ப்பிப்பேன்.
ஜூலை 19-ந்தேதி கனமழை ஏற்பட்டது நிவாரணம், மறுவாழ்வு மற்றும் சீரமைப்பு ஆகிய 3 வடிவுகளில் மீட்புப் பணி நடைபெற்றது. மனித உயிரிழப்புகளை குறைப்பதே எங்களின் முதல் முன்னுரிமையாக இருந்தது. இந்த மாவட்டத்தில் நான்கு விலைமதிப்பற்ற உயிர்கள் பலியானதை எண்ணி வருந்துகிறோம். மாவட்ட நிர்வாகம், காவல்துறை மற்றும் உள்ளூர் சட்டமன்ற உறுப்பினர்கள் இரவோடு இரவாக உடனடியாக நடவடிக்கை எடுக்காமல் இருந்திருந்தால், உயிரிழப்பு எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருந்திருக்கக் கூடும்.
உயிரிழப்புகளை குறைப்பதே முதல் முன்னுரிமையாக இருந்தது. அதன்பிறகு, காணாமல் போனவர்களைத் தேடிக் கண்டறிவதன் மூலம் அவர்களை மீட்டெடுப்பதில் கவனம் செலுத்தப்பட்டது. தற்போது நாங்கள் மறுவாழ்வு மற்றும் மறுகட்டமைப்புப் பணிக்கான கட்டத்தில் அடியெடுத்து வைக்கிறோம். இக்கட்டத்தில், தற்காலிக மற்றும் நிரந்தர நடவடிக்கைகள் மூலம் சேதமடைந்த உள்கட்டமைப்புகளும் வாழ்வாதாரங்களும் சீரமைக்கப்படும்.
தற்போதைய SDRF இழப்பீட்டு விகிதங்கள் ஏழு முதல் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு நிர்ணயிக்கப்பட்டவை. அதன்பிறகு, பணவீக்கம் மற்றும் கட்டுமானச் செலவுகள் கணிசமாக அதிகரித்துள்ளன. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மிகவும் யதார்த்தமான இழப்பீடு கிடைப்பதை உறுதிசெய்யும் வகையில், SDRF நிவாரணத் தொகையை உயர்த்த நாங்கள் முடிவு செய்துள்ளோம்.
இவ்வாறு உமர் அப்துல்லா தெரிவித்தார்.