இந்தியா

ஆம் ஆத்மியுடன் மோதல்... ராகவ் சதாவிற்கு Z பாதுகாப்பு வழங்கிய பா.ஜ.க.!

பஞ்சாப் அரசு ராகவ் சதாவிற்கு வழங்கிய போலீஸ் பாதுகாப்பை திரும்பப் பெற்றுள்ளது.

ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் ராகவ் சதாவிற்கும், அக்கட்சி தலைமைக்கும் இடையே கடந்த சில நாட்களாக கருத்து வேறுபாடுகள் நிலவிவரும் நிலையில், அவருக்கு வழங்கப்பட்டிருந்த Z+ பிரிவு பாதுகாப்பை பஞ்சாப் அரசு திரும்பப் பெற்றுள்ளது.

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ராகவ் சதாவிற்கு, மாநில காவல்துறை சார்பில் உயர்மட்ட Z+ பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. இச்சூழலில் மாநில அரசின் சமீபத்திய பாதுகாப்பு ஆய்வுக் கூட்டத்திற்குப் பிறகு, அவருக்கு வழங்கப்பட்டிருந்த இந்த உயர்மட்ட பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டுள்ளது.

மாநில அரசு பாதுகாப்பை விலக்கிய சில மணிநேரங்களிலேயே, உளவுத்துறையின் அச்சுறுத்தல் மதிப்பீட்டு அறிக்கையின் அடிப்படையில் மத்திய உள்துறை அமைச்சகம் அவருக்கு 'Z' பிரிவு பாதுகாப்பை வழங்கியுள்ளது.

டெல்லி மற்றும் பஞ்சாப் என இரு மாநிலங்களிலும் இந்த பாதுகாப்பு விரிவுப்படுத்தப்பட்டுள்ளது. மத்திய அரசின் ஏற்பாடு முறைப்படி செய்யப்படும் வரை, தற்போதைக்கு உடனடிப் பாதுகாப்பு வழங்குமாறும் டெல்லி காவல்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே ஆம் ஆத்மி பாஜகவிற்கு எதிராக ராகவ் சதா பேசுவதில்லை எனக் குற்றம் சாட்டியிருந்த நிலையில், தற்போது பாஜகவே பாதுகாப்பு வழங்கியுள்ளது.

இம்மாத தொடக்கத்தில் ராகவ் சதா வகித்து வந்த மாநிலங்களவை துணைத் தலைவர் பதவியில் இருந்து அவரை ஆம் ஆத்மி கட்சித் தலைமை நீக்கியது குறிப்பிடத்தக்கது.