கோப்புப்படம்  
இந்தியா

வாட்ஸ் அப் குழுவில் மோதல்: காங்கிரசுக்கு எதிராக பதிவிட்ட 3 பேருக்கு கத்திக்குத்து

வாட்ஸ் அப் குழுவில் அதே பகுதியை சேர்ந்த ரசாக், அகமது மற்றும் ஜாவேத் இருந்தனர். ரசாக், அகமது, ஜாவேத் குடும்பத்தினர் போலீசில் புகார் செய்தனர்.

திருப்பதி:

தெலுங்கானா மாநிலம், காந்தி வேட்டாவை சேர்ந்தவர் பீம் தாஸ். இவர் அதே பகுதியில் பல்பொருள் விற்பனை அங்காடி நடத்தி வருகிறார். மேலும் இவர் உள்ளூர் காங்கிரஸ் தலைவராக இருந்து வருகிறார்.

இவரது வாட்ஸ் அப் குழுவில் அதே பகுதியை சேர்ந்த ரசாக், அகமது மற்றும் ஜாவேத் இருந்தனர். இவர்கள் பீம்தாஸ் வாட்ஸ் அப் குழுவில் காங்கிரஸ் கட்சி தெலுங்கானாவில் புதிய வாக்குறுதிகள் எதையும் அளிக்காமல் இஸ்லாமியர்களை ஏமாற்றி வருவதாக பதிவு செய்தனர்.

இதனைக் கண்ட பீம் தாஸ் அவர்களை வாட்ஸ் அப் குழுவில் இருந்து நீக்கினார்.

இதனைக் கண்ட 3 பேரும் ஆத்திரமடைந்து பீம் தாஸ் வீட்டிற்கு சென்று ஏன் வாட்ஸ் அப் குழுவில் இருந்து நீக்கினீர்கள் என்றால் தட்டி கேட்டனர்.

இதனால் இவர்களுக்கு இடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது. பீம் தாஸ் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து வந்து 3 பேரையும் வயிற்றில் சரமாரியாக குத்தினார். அவர்களும் பீம் தாசை தாக்கினர். இதில் 4 பேரும் படுகாயம் அடைந்தனர். அருகில் இருந்தவர்கள் 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக பன்ஸ்வாடா ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக நிஜமாபாத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

இதுகுறித்து ரசாக், அகமது, ஜாவேத் குடும்பத்தினர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் பீம் தாஸ் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.