சௌரவ் தாஸ் மற்றும் அசுதோஷ் ரங்கா ஆகியோர் இன்றுக்குள் விடுதலை செய்யப்படவில்லை என்றால், சட்டப்பூர்வமான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சிஜேபி பகிரங்கமாக எச்சரித்துள்ளது.
டெல்லியில் நடைபெற்ற 'லேரா தோ தேசியக்கொடி' பேரணியின் போது தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்ட காக்ரோச் ஜனதா கட்சித் தலைவர்களின் விடுதலை விவகாரம் தீவிரமடைந்துள்ளது. சௌரவ் தாஸ் மற்றும் அசுதோஷ் ரங்கா ஆகியோர் இன்றுக்குள் விடுதலை செய்யப்படவில்லை என்றால், சட்டப்பூர்வமான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அக்கட்சி பகிரங்கமாக எச்சரித்துள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள CJP இணை-ஒருங்கிணைப்பாளர்களான சௌரவ் தாஸ் மற்றும் அசுதோஷ் ரங்கா ஆகியோரின் ஐந்து நாள் நீதித்துறை காவல்காலம் இன்றுடன் முடிவடைவதாக இருந்தது. ஆனால், அவர்களை வேண்டுமென்றே சிறையிலேயே அடைத்து வைப்பதற்காக டெல்லி காவல் துறையும் அதிகாரிகளும் திட்டமிட்டு தாமதப்படுத்தும் உத்திகளைக் கையாள்வதாக காக்ரோச் ஜனதா கட்சி தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நாட்டின் மூத்த வழக்கறிஞர் கபில் சிபலிடம் கலந்தாலோசனை நடத்தப்பட்டுள்ளதாகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதனிடையே, இவ்வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த காக்ரோச் ஜனதா கட்சியின் நிறுவனரான அபிஜித் திப்கே கடந்த நேற்று நிபந்தனைப் பிணையில் விடுவிக்கப்பட்டார். பிணையில் வெளியே வந்த பிறகு பேசிய அவர், டெல்லி காவல் துறையின் கைது நடைமுறைகளைக் கடுமையாக விமர்சித்தார். தங்களை நாள் முழுவதும் தடுத்து வைத்துவிட்டு, நள்ளிரவு 3:30 மணிக்கு திடீரென கைது ஆவணங்களுடன் வந்து நிற்பது டெல்லி போலீசாரின் விசித்திரமான வழக்கம் என்று அவர் சாடினார். மேலும், தனது தோழர்களை விரைவில் சுதந்திரக் காற்று சுவாசிக்க செய்வதற்காகக் காத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
CJP அமைப்பின் சட்ட விவகாரப் பிரிவுத் தலைவர் ரத்னா சிங் கூறுகையில், சௌரவ் தாஸ் மற்றும் அசுதோஷ் ரங்கா ஆகியோரின் விடுதலைக்கான அனைத்து நடைமுறைகளும் முடிக்கப்பட்டுவிட்டதாகவும், தற்போது முறையான ஒப்புதலுக்காக மட்டுமே காத்திருப்பதாகவும் தெரிவித்தார். தேசியக் கொடியை ஏந்துவது எந்த வகையிலும் குற்றமாகாது என்றும், அமைதியான முறையில் போராட்டம் நடத்துவது பொதுமக்களின் உரிமை என்றும் அவர் கூறினார். இன்றுக்குள் இருவரும் விடுவிக்கப்படாவிட்டால் சட்டத்தின் முன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்ற எச்சரிக்கை டெல்லி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.