இந்தியா

நீட் முறைகேடு: CJP சார்பில் பெங்களூருவில் இன்று போராட்டம்-நடிகர் பிரகாஷ் ராஜ் பங்கேற்பு!

கல்வி அமைச்சர் பதவி விலகும் வரை லக்னோ, அமிர்தசரஸ் மற்றும் ஜெய்ப்பூர் ஆகிய நகரங்களுக்கும் இந்த போராட்டத்தை விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளனர்.

இந்தியக் கல்வித் துறையில் ஏற்பட்டுள்ள தொடர் குளறுபடிகளுக்குப் பொறுப்பேற்று, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவி விலக வலியுறுத்தி, பெங்களூருவில் இன்று பிரம்மாண்டப் போராட்டம் நடைபெறுகிறது. 'காக்ரோச் ஜனதா கட்சி' என்ற அமைப்பின் சார்பில், பெங்களூருவில் உள்ள Freedom Park பகுதியில் நடைபெறும் இந்த அமைதி வழிப் போராட்டத்தில், பிரபல நடிகரும் சமூக ஆர்வலருமான பிரகாஷ் ராஜ் நேரடியாகப் பங்கேற்கிறார்.

சமீபகாலமாக தேசிய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய பின்வரும் விவகாரங்களை முன்வைத்து இந்த நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படுகிறது. தேர்வுத் தாள் கசிவு மற்றும் முறைகேடுகள் காரணமாகப் பல நீட் தேர்வர்கள் தற்கொலை செய்துகொண்ட விவகாரம். CBSE மறுமதிப்பீட்டு முறையில் நிலவும் குளறுபடிகள், ஒட்டுமொத்த இந்தியக் கல்வி முறையும் சிதைந்து வருவதாகப் போராட்டக் குழுவினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

"மத்திய கல்வி அமைச்சகத்தின் இந்தத் தொடர் தோல்விகளால், நாடு முழுவதும் சுமார் 1 கோடிக்கும் அதிகமான மாணவர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்" என்று CJP நிறுவனர் அபிஜீத் திப்கே கடுமையாக சாடியுள்ளார்.

அரசியலமைப்புச் சட்டத்துடன் பங்கேற்பு:

போராட்டத்தில் கலந்துகொள்ளும் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் அனைவரும், கல்விச் சீர்திருத்தத்திற்கான தங்களின் அர்ப்பணிப்பைக் காட்டும் விதமாக கைகளில் இந்திய அரசியலமைப்புச் சட்டம் மற்றும் தேசியக் கொடியை ஏந்தி வருமாறு CJP தேசிய ஊடகத் தொடர்பாளர் அசுதோஷ் ரான்கா கேட்டுக்கொண்டுள்ளார். ஏற்கனவே டெல்லி ஜந்தர் மந்தர் மற்றும் புனே சாவித்ரிபாய் புலே பல்கலைக்கழகத்தில் இதற்கான போராட்டங்கள் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளன.

கல்வி அமைச்சர் பதவி விலகும் வரை லக்னோ, அமிர்தசரஸ் மற்றும் ஜெய்ப்பூர் ஆகிய நகரங்களுக்கும் இந்த போராட்டத்தை விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளனர். நாளை ஜெய்ப்பூரில் நடக்கவிருக்கும் போராட்டத்தில் பிரபல சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் பங்கேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.