நீட் வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக, டெல்லி ஜந்தர் மந்தரில் 'காக்ரோச் ஜனதா கட்சி' மற்றும் மாணவர் அமைப்புகள் நடத்தி வரும் தொடர் போராட்டத்தைப் பயன்படுத்தி, வதந்திகளையும் தவறான தகவல்களையும் பரப்பிய 400-க்கும் மேற்பட்ட பாகிஸ்தான் பின்னணி கொண்ட சமூக வலைதள கணக்குகளை டெல்லி காவல்துறை கண்டறிந்து முடக்கியுள்ளது.
மத்திய மாவட்ட டெல்லி காவல்துறை துணை ஆணையர் ரோஹித் ராஜ்பீர் சிங் பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்ததாவது,
மாணவர் போராட்டத்தை முதன்மைப்படுத்தி, போலியான செய்திகள் மற்றும் எடிட் செய்யப்பட்ட வீடியோக்களைப் பரப்பி அமைதியைக் குலைக்க முயன்ற 400-க்கும் மேற்பட்ட பாகிஸ்தானைச் சேர்ந்த சமூக வலைதளக் கணக்குகள் முடுக்கப்பட்டுத் தடை செய்யப்பட்டுள்ளன.
அடையாளம் தெரியாத அல்லது சரிபார்க்கப்படாத சமூக வலைதளக் கணக்குகளில் வரும் தகவல்களைப் பார்த்து மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் தூண்டப்பட வேண்டாம் என காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
போராட்டம் நடைபெறும் ஜந்தர் மந்தர் பகுதியில் அசம்பாவிதங்களைத் தவிர்க்க, பல அடுக்கு இரும்புத் தடுப்புகள் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டுப் பலப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், குற்றப் பின்னணி கொண்டவர்களைக் கண்டறிய புகைப்பட அங்கீகார கேமராக்கள் மூலம் தீவிர கண்காணிப்பு நடத்தப்பட்டு வருகிறது.
மத்திய அரசுக்கும் CJP பிரதிநிதிகளான சௌரவ் தாஸ் மற்றும் அசுதோஷ் ரங்கா ஆகியோருக்கும் இடையே இன்று 3-வது கட்ட பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவை CJP உறுதியாகக் கோரி வருகிறது. ஆனால், "பொறுப்பிலிருந்து விலகி ஓடுவது தீர்வாகாது; மக்களுக்கு அளித்த வாக்குறுதியை அரசு நிறைவேற்றும்" என அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோர், மாணவர் போராட்டங்களை ஒடுக்க முனையும் அரசு, வினாத்தாள் கசிவைத் தடுக்கத் தவறிவிட்டதாகக் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
போலி தகவல்கள் பரப்புவதைத் தவிர்க்குமாறு எச்சரித்துள்ள டெல்லி காவல்துறை, ஜந்தர் மந்தரில் பாதுகாப்பை உச்சகட்ட அளவில் பலப்படுத்தியுள்ளது. இன்றைய பேச்சுவார்த்தையின் முடிவைப் பொறுத்து CJP தங்களின் அடுத்தகட்ட போராட்ட அறிவிப்பை வெளியிட வாய்ப்புள்ளது.