டெல்லி ஜந்தர் மந்தரில் அத்துமீறி நுழைந்ததற்காக சிஜேபி நிர்வாகிகள் செளரவ் தாஸ் மற்றும் அஷூதோஷ் ரங்கா ஆகியோர் கைது செய்யப்பட்டு ஐந்து நாட்கள் நீதிமன்ற காவலில் அனுப்பப்பட்டுள்ள நிலையில், இந்த சம்பவத்திற்கு சிஜேபி தலைவர் அபிஜீத் தீப்கே கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
டெல்லி ஜந்தர் பகுதியில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி, காக்ரோச் ஜனதா கட்சியின் முக்கிய நிர்வாகிகள் ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.
இதையடுத்து கைது செய்யப்பட்ட அபிஜீத் தீப்கே, செளரவ் தாஸ் மற்றும் அஷூதோஷ் ரங்கா ஆகியோர்கள் நாட்டில் அமைதியை காக்கும்படி நிபந்தனை விதித்து நீதிமன்றம் விடுதலை செய்தது.
இதைத்தொடர்ந்து டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் இனி போராட்டங்கள் நடத்துவதற்கு அனுமதி கிடையாது என தெரிவித்து, அந்த பகுதியை தடை செய்யப்பட்ட பகுதியாக டெல்லி காவல்துறை அறிவித்தது.
இதற்கிடையில் ஜந்தர் மந்தரில் இன்று அத்துமீறி நுழைந்து போராட்டத்தில் ஈடுபட முயன்ற சிஜேபி நிர்வாகிகளான செளரவ் தாஸ் மற்றும் அஷூதோஷ் ரங்கா ஆகியோர்கள் தடுப்புக் காவலில் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கை இன்று காலை நீதிபதி முன்பு விசாரணைக்கு வந்தபோது, இருவரையும் ஐந்து நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்த நிலையில் சிஜேபி நிர்வாகிகளின் கைது நடவடிக்கைக்கு அபிஜீத் தீப்கே தனது கண்டனத்தை எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “செளரவ் தாஸ் மற்றும் அஷூதோஷ் ரங்கா ஆகியோர் 5 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் செய்த தவறு? ஜந்தர் மந்தரில் மூவர்ண கொடியை ஏற்றியதுதான்” என்று பதிவிட்டுள்ளார்.
மேலும் அவர், பிரதமர் மோடியை எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டு, “எதிர்ப்பை நசுக்குவதில் நீங்கள் அவ்வளவு உறுதியாக இருந்தால், இந்த கோழைத்தனமான தந்திரங்களுக்கு பின்னால் ஒளிந்துகொள்வதற்கு பதிலாக, அவசரநிலையை அதிகாரப்பூர்வமாக அறிவியுங்கள்” என தெரிவித்துள்ளார்.