இந்தியா

CJP புதிய போராட்டம் எச்சரிக்கை: டெல்லி ஜந்தர் மந்தரில் மீண்டும் உச்சகட்ட பாதுகாப்பு!

தற்போது நிலுவையில் உள்ள வழக்குகளை மையமாக வைத்து மீண்டும் அங்கு பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.

மத்திய கல்வி அமைச்சராக இருந்த தர்மேந்திர பிரதான் பதவி விலகியதைத் தொடர்ந்து, 36 நாட்கள் நீடித்த போராட்டத்தை கடந்த 25ஆம் தேதி அன்று தற்காலிகமாக முடித்துக்கொள்வதாக 'காக்ரோச் ஜனதா கட்சி' அறிவித்திருந்தது.

ஆனால், போராட்டக்காரர்கள் மீது போடப்பட்ட FIR-ஐ திரும்பப் பெறுவது குறித்த வாக்குறுதியை மத்திய அரசு மீறிவிட்டதாகக் கூறி, CJP கட்சி மீண்டும் போராட்டக் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து புதுடெல்லியிலுள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் டெல்லி காவல்துறையினரும் துணை ராணுவப் படையினரும் பாதுகாப்பு ஏற்பாடுகளை மிகத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

இரும்புத் தடுப்புகள்:

முந்தைய போராட்டங்களின் போது போராட்டக்காரர்கள் தடுப்புகளை அகற்றிவிட்டு நாடாளுமன்றத்தை நோக்கி முன்னேற முயன்றனர். இதைத் தவிர்க்கும் வகையில், தற்போது ஜந்தர் மந்தரின் இரு புறங்களிலும் வைக்கப்பட்டுள்ள இரும்புத் தடுப்புகளை அகற்றிவிட முடியாதபடி, அவற்றை இரும்பு வெல்டிங் செய்து ஒன்றாக இணைத்து பலப்படுத்தி வருகின்றனர்.

சிஜேபி விடுத்துள்ள முக்கியக் குற்றச்சாட்டுகள்:

வாக்குறுதி மீறல்:

போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மீது எந்தவித சட்ட நடவடிக்கையோ, வழக்குப்பதிவோ செய்யப்பட மாட்டாது என கடந்த 25 ஆம் தேதி நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது மத்திய அரசு உறுதியளித்ததாக சிஜேபி செய்தி தொடர்பாளர் அசுதோஷ் ரன்கா தெரிவித்துள்ளார். ஆனால், பாஜனதா ஆளும் மாநிலங்களில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் கைது செய்யப்பட்டு வருவதாக சிஜேபி குற்றம் சாட்டியுள்ளது.

கட்சியின் கோரிக்கைகள்:

* அனைத்து FIR வழக்குகளையும் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.

* கைது செய்யப்பட்ட மாணவர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும்.

* டெல்லி போலீஸ் மற்றும் மத்திய புலனாய்வு அமைப்புகள் புதிய வழக்குகளைப் பதிவு செய்யக் கூடாது.

* அரசுடன் எட்டப்பட்ட ஒப்பந்த நகலை உடனடியாகப் பகிரங்கமாக வெளியிட வேண்டும்.

சட்ட உதவிகள் மற்றும் நிதியுதவி:

போராட்டத்தில் பாதிக்கப்பட்டு சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கு உதவ CJP கட்சி "SAAKSHI" என்ற ஆன்லைன் தளத்தையும், தேசிய அளவிலான சட்ட உதவி மையத்தையும் தொடங்கியுள்ளது. மேலும், மாநிலங்களவை உறுப்பினர் கபில் சிபல், பாதிக்கப்பட்ட மாணவர்களின் சட்டப் போராட்டத்திற்கு உதவ ரூ.1 கோடி நிதி ஒதுக்குவதாக அறிவித்துள்ளார்.

CJP நிறுவனர் அபிஜீத் திப்கே எச்சரிக்கை:

மகாராஷ்டிராவில் செய்தியாளர்களைச் சந்தித்த CJP நிறுவனர் அபிஜீத் திப்கே, "மாணவர்களை மீண்டும் வீதிக்கு வர அரசு வற்புறுத்துகிறது. மாணவர்களின் கோபம் இன்னும் தணியவில்லை. அரசு தனது போக்கை மாற்றிக்கொள்ளாவிட்டால் மாணவர்கள் அதைச் செய்வார்கள்" என எச்சரித்துள்ளார்.

NEET தேர்வுத் தாள்கள் கசிவு மற்றும் சிபிஎஸ்இ மதிப்பீட்டு குளறுபடிகளைக் கண்டித்து CJP அமைப்பினர் நடத்திய தொடர் போராட்டத்தைத் தொடர்ந்து, முன்னாள் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகினார். தற்போது நிலுவையில் உள்ள வழக்குகளை மையமாக வைத்து மீண்டும் அங்கு பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.