மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி நேற்று நடத்தப்பட்ட 'நாடாளுமன்ற நோக்கிய பேரணி' இன்றும் தொடரும் என கரப்பான்பூச்சி ஜனதா கட்சி ( (CJP) அறிவித்துள்ளது.
நேற்று நடந்த பேரணியை தடியடி நடத்தியும் கண்ணீர்ப்புகை குண்டு வீசியும் போலீசார் கலைத்தனர்.
இன்றும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கூட்டம் கூட உள்ளதால் இரண்டாவது நாளாக இன்றும் இந்தப் பேரணி தொடரும் என்று சிஜேபி நிறுவனர் அபிஜீத் திப்கே அறிவித்துள்ளார்.
ஜந்தர் மந்தரில் நேற்று இரவு நிலவிய பதற்றமான சூழ்நிலைக்கு இடையே செய்தியாளர்களிடம் பேசிய அபிஜீத் திப்கே, "நாங்கள் இங்கிருந்து நகரப்போவதில்லை. செவ்வாய்க்கிழமையும் நாடாளுமன்றத்தை நோக்கி மீண்டும் பேரணியாகச் செல்வோம்" என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
நேற்று பேரணியின் போது நடந்த கல்வீச்சு மற்றும் வன்முறையில் 118க்கும் மேற்பட்ட காவல் துறையினர் காயமடைந்ததாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது. 70க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்களும் இதில் காயமடைந்தனர்.
நேற்று நடந்த மோதலின் போது ஜந்தர் மந்தரில் இருந்த போராட்ட மேடைகளை டெல்லி காவல்துறை அகற்றியிருந்தது.
இருப்பினும், இரவு மழை பெய்து கொண்டிருந்த போதிலும், நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் மீண்டும் ஜந்தர் மந்தருக்குத் திரும்பி, தற்காலிகக் கூடாரங்களையும் மேடைகளையும் அமைத்து போராட்டத்தைத் தொடர்ந்தனர்.
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்யும் வரை இந்த அமைதிப் போராட்டம் ஓயாது என்றும், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து அதிகாரப்பூர்வ அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என்றும் சிஜேபி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
சிஜேபி அமைப்பின் பிரதிநிதிகள் நேற்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி. நட்டாவை இருமுறை சந்தித்துப் பேசினர்.
காலை நடந்த முதல் சந்திப்பில் கோரிக்கைகளை எழுத்துப்பூர்வமாகச் சமர்ப்பிக்குமாறு அமைச்சர் கேட்டுக்கொண்டார்.
மாலை இரண்டாம் சந்திப்பில் சிஜேபி பிரதிநிதிகள் தங்கள் 3 முக்கியக் கோரிக்கைகள் அடங்கிய மனுவை ஜே.பி. நட்டாவிடம் முறைப்படி ஒப்படைத்தனர்.
இன்று மீண்டும் பேரணி நடத்த திட்டமிடப்பட்டுள்ளதால், ஜந்தர் மந்தர் பகுதியைச் சுற்றிலும் மீண்டும் பலத்த போலீஸ் பாதுகாப்பும், தடுப்புகளும் அமைக்கப்பட்டு வருகின்றன.
ஜந்தர் மந்தர் பகுதியில் இணையதளச் சேவைகள் முடக்கப்பட்ட நிலையிலும், மழைக்கு இடையிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போராட்டக்காரர்களும் நூற்றுக்கணக்கான போலீசாரும் அங்கு குவிந்துள்ளதால் தலைநகரில் உச்சக்கட்ட பரபரப்பு நிலவுகிறது.