புதுடெல்லி:
இந்தியா-சீனா இடையேயான எல்லைப் பிரச்சினை தீவிரம் அடைந்துள்ள நிலையில், இரு தரப்பும் பாதுகாப்பு கட்டமைப்பு வசதிகளை அதிகரித்து வருகின்றன. இந்திய எல்லையையொட்டி சாலைகள், குடியிருப்புகள், ஹெலிகாப்டர் இறங்கும் தளம் உள்பட பாதுகாப்பு நடைமுறைகளை சீனா மேற்கொண்டது. இதன் தொடர்ச்சியாக லடாக்கின் பாங்காங் ஏரியின் இரு கரைகளையும் இணைக்கும் வகையில் சீனா புதிய பாலத்தை கட்டி வருகிறது. செயற்கைகோள் புகைப்படம் மூலம் இது அம்பலமாகி உள்ளது.
இதுதொடர்பாக இந்திய பாராளுமன்றத்தில் எழுப்பட்ட கேள்விக்கு மத்திய அரசு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளது. அதில், கூறியிருப்பதாவது:-
பாங்காங் ஏரியில் சீனாவால் கட்டப்பட்டு வரும் பாலத்தை அரசு கவனத்தில் கொண்டுள்ளது. இந்த பாலமானது, 1962ம் ஆண்டில் இருந்து சீனாவின் சட்டவிரோத ஆக்கிரமிப்பில் உள்ள பகுதியில் கட்டப்பட்டு வருகிறது.
இந்த சட்டவிரோத ஆக்கிரமிப்பை இந்திய அரசு ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவில்லை. ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய யூனியன் பிரதேசங்கள் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்றும், இந்தியாவின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை மற்ற நாடுகள் மதிக்க வேண்டும் என்றும் நாங்கள் எதிர்பார்க்கிறோம். இதனை அரசு பல முறை தெளிவுபடுத்தியிருக்கிறது.
இவ்வாறு மத்திய அரசு கூறி உள்ளது.
இந்த பாலம் கட்டுவதன் மூலம் சீனா தனது படைகளையும், ஆயுதங்களையும், நவீன பீரங்கிகளையும் எளிதாகவும், விரைவாகவும் இந்திய எல்லைக்கு அருகே நிலைநிறுத்த முடியும். மேலும் இந்தியா- சீனா இடையேயான எல்லை பிரச்சினை தீரும்வரை சீனா தனது படையை எல்லையில் குவிக்க மேலும் ஒரு வழித்தடமும் அதற்கு கிடைத்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... பாகிஸ்தான் சென்று விளையாடுவதை உறுதி செய்தது ஆஸ்திரேலியா: ரசிகர்கள் உற்சாகம்