ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் நாகரிக உரையாடல் மன்றத்தில் பங்கேற்பதை சீனா, கஜகஸ்தான், ஈரான், தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் உள்ளிட்ட 15 நாடுகள் உறுதி செய்துள்ளன.
இந்த மாத இறுதியில் டெல்லியில் இந்தியா நடத்தவுள்ள இந்த நிகழ்வில் பாகிஸ்தானும் பங்கேற்கும் என்று "நம்பிக்கை" கொண்டிருப்பதாக மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்தார்.
இந்த மன்றம் வரலாற்று சிறப்புமிக்க 'புராணா கிலா' வளாகத்தில் நவம்பர் 20 முதல் 22 வரை நடைபெறவுள்ளது. இதன் தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்வார் என்று அவர் கூறினார்.
நிகழ்வுக்கு முன்னதாக, டெல்லியில் உள்ள பாரத மண்டபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சரிடம், இந்த மன்றத்தில் இந்தியா-பாகிஸ்தான் இடையிலான "பயங்கரவாதம் தொடர்பான சிக்கல்கள்" மற்றும் சீனாவுடனான "எல்லை தொடர்பான சிக்கல்கள்" குறித்து விவாதிக்கப்படுமா என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த மத்திய அமைச்சர், "நமது அண்டை நாடுகளை பொறுத்தவரை நீங்கள் எழுப்பியுள்ள கவலைகள் குறித்து கூறுகிறேன்... பாகிஸ்தானின் நாகரிக மற்றும் கலாச்சார பரிணாம வளர்ச்சி நம்மிடமிருந்து வேறுபட்டது அல்ல என்று நான் கருதுகிறேன்.
அவர்கள் நம்மிடம் இருந்து பிரிந்து 80 ஆண்டுகள் கூட ஆகவில்லை; அவர்களின் பரிணாம வளர்ச்சி நம்முடன் இணையாகவே நிகழ்ந்துள்ளது. எனவே, இந்த விஷயத்தில் அவர்களுக்கு எந்தவிதமான கருத்து வேறுபாடுகளும் இருக்க வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது" என்று கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், புவிசார் அரசியல், மூலோபாய மற்றும் இருதரப்பு உறவுகள் ஒருபுறம் இருந்தாலும், "இந்த மன்றத்தில், வரும் காலங்களில் கலாச்சார உறவுகளை எவ்வாறு வலுப்படுத்துவது, நாடுகளுக்கு இடையிலும், அந்த நாட்டு மக்களுக்கு இடையிலும் சிறந்த உரையாடலையும் நல்லிணக்கத்தையும் எவ்வாறு ஏற்படுத்துவது என்பது குறித்து விவாதிக்கப்படும்" என்று தெரிவித்தார்.