2029 நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் மூன்று ஆண்டுகளே உள்ளது.
இந்நிலையில் தமிழக முதல்வரும் தமிழக வெற்றி தமிழக தலைவருமான விஜய், நாட்டின் அடுத்த பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புள்ள தலைவர்களின் பட்டியலில் 3வது இடத்தைப் பிடித்துள்ளார்.
'இந்தியா டுடே - சிவோட்டர்' அமைப்பு நடத்திய 'மூட் ஆப் தி நேஷன்' கருத்துக்கணிப்பில் பிரதமர் மோடி மற்றும் ராகுல் காந்திக்கு அடுத்தபடியாக விஜய் இடம் பெற்றுள்ளார்.
ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 25 வரை 25,184 பேரிடம் நேரடியாக கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.
மேலும் சிவோட்டர் அமைப்பு கடந்த 6 மாதங்களில் 91,795 பேரிடம் நடத்திய கருத்துக்கணிப்பு தரவுகளும் இந்த கருத்துக்கணிப்பின் முடிவுகளுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளன.
கருத்துக்கணிப்பில், அடுத்த பிரதமராக யாரைப் பார்க்க விரும்புகிறீர்கள் என்ற கேள்விக்கு 9.2% பேர் விஜய்யின் பெயரைப் பரிந்துரைத்துள்ளனர். மோடிக்கு 48.7% மற்றும் ராகுல் காந்திக்கு 27.1% ஆதரவு கிடைத்துள்ளது.
மேற்கு வங்கமுன்னாள் முதல்வரும் திரிணமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜிக்கு 2%, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவுக்கு 1.7%, கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் (சிஜேபி) நிறுவனர் அபிஜித் தீப்கேவுக்கு 1.3% மற்றும் ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 1.2% பேர் ஆதரவளித்துள்ளனர்
2024இல் அரசியலில் களமிறங்கிய விஜய் வெறும் இரண்டே ஆண்டுகளில் மாநில அரசியலையும் தாண்டி தேசிய அரசியலின் சென்சேஷனாக மாறியுள்ளதாக சர்வே கூறுகிறது.
எதிர்க்கட்சிகளின் கூட்டணியை வழிநடத்தத் தற்போது எந்தத் தலைவர் பொருத்தமானவர் என்ற கேள்விக்கம் விஜய்க்கு குறிப்பிடத்தக்க ஆதரவு கிடைத்துள்ளது.
இப்பட்டியலில் ராகுல் காந்தி 29% ஆதரவுடன் முதலிடத்தில் உள்ள நிலையில், விஜய் 12.2% ஆதரவுடன் 2வது இடத்தைப் பிடித்துள்ளார்.
எதிரணியை வழிநடத்த மம்தா பானர்ஜி 8.5%, அரவிந்த் கெஜ்ரிவால் 7.5% மற்றும் அகிலேஷ் யாதவ் 6.9% ஆதரவைப் பெற்றுள்ளனர்.
தமிழகத்தில் தவெகவுடன் காங்கிரஸ் பயணிக்கும் நிலையில் விஜயின் தேசிய பிம்பம் அக்கட்சிக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே தவெகவை சேர்ந்த அமைச்சர்கள், விஜய்க்கு பிரதமர் ஆக முழு தகுதியும் உள்ளது என கூறிவருகின்றனர்.
வட மாநிலங்களிலும் விஜய் தளபதி என்ற பெயர் அண்மைக் காலமாக சமூக வலைத்தளங்களை ஆக்கிரமித்துள்ளது குறிப்பிடத்தக்கது.=