இந்தியா

மேற்கு வங்கத்தில் நேருக்கு நேர் மோதிக்கொள்ளும் முதலமைச்சர் - சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர்

மீண்டும் நேருக்கு நேர் மோதும் மம்தா பானர்ஜி - சுவேந்து அதிகாரி

மாலை மலர்

294 தொகுதிகளை கொண்ட மேற்குவங்கத்திற்கு ஏப்ரல் 23 மற்றும் ஏப்ரல் 29 என இரண்டு கட்டங்களாகத் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது.

இதனையொட்டி தற்போது ஆட்சியில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ் 4வது முறையாக ஆட்சியை பிடிக்க தீவிர ஆர்வம் காட்டி வருகிறது.

இம்முறை 294 தொகுதிகளில் 291 தொகுதிகளில் போட்டியிடுகிறது. மீதமுள்ள 3 இடங்கள் அதன் கூட்டணிக் கட்சியான BGPM-க்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சட்டசபைத் தேர்தலுக்கான 291 வேட்பாளர்கள் அடங்கிய முழுப் பட்டியலை திரிணாமுல் காங்கிரஸ் இன்று வெளியிட்டுள்ளது.

அதன்படி முதலமைச்சர் மம்தா பானர்ஜி தனது சொந்த தொகுதியாக பவானிபூர் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். இதில் சுவாரசியம் என்னவென்றால், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரியும் அதே தொகுதியில்தான் போட்டியிடுகிறார்.

கடந்த 2021 தேர்தலில் நந்திகிராமில் சுவேந்துவிடம் தோல்வியடைந்த மம்தா பானர்ஜி, இந்த முறை அங்கு போட்டியிடவில்லை. நந்திகிராம் தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் பவித்ரா கர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இதனால் மம்தாவின் கோட்டையான பவானிபூரிலேயே சுவேந்துவை களம் இறக்கி அவருக்கு கடும் சவாலை விடுத்துள்ளது பாஜக.

ஒருகாலத்தில் திரிணாமுல் தலைவரின் நெருங்கிய உதவியாளராக இருந்த சுவேந்து, கடந்த 2020ஆம் ஆண்டு மம்தாமீது ஊழல் மற்றும் தேர்தல் முறைகேடு குற்றச்சாட்டுகளை முன்வைத்து அக்கட்சியில் இருந்து விலகி, பாஜகவில் இணைந்தார்.

இப்போது அவரே பானர்ஜிக்கு எதிராக களமிறங்குவது குறிப்பிடத்தக்கது.