இந்திய தேர்தல் ஆணையத்தால் மேற்கொள்ளப்பட்ட வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு தீவிரத் திருத்தப் பணிகளில் முறைகேடுகள் நடந்ததாக கூறப்படும் விவகாரம் தொடர்பாக, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாருக்கு எதிராக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட இந்தியா கூட்டணியினர் உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, திரிணாமூல் காங்கிரஸ் கட்சி எம்.பி. சௌகதா ராய், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி பிரசாத் யாதவ், தேசியவாத காங்கிரஸ் கட்சி (பவார்) தலைவர் சுப்ரியா சுலே, சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத், இந்திய காங்கிரஸ் கட்சியின் டி. ராஜா, ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா எம்.பி. மஹுவா மாஜி, சிபிஐ(எம்) பொதுச் செயலாளர் எம்.ஏ. பேபி மற்றும் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் இ.டி. முகமது பஷீர் ஆகியோர் மனுத்தாக்கல் செய்த தலைவர்களில் அடங்குவர்.
வாக்கு திருட்டு மற்றும் வாக்காளர் நீக்க நடவடிக்கைகளுக்குப் பொறுப்பேற்று தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்றும், இந்த எஸ்.ஐ.ஆர். திருத்தப் பணிகளுக்காக ஒரு சுதந்திரமான குழுவை அமைக்க வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டுள்ளது.
இந்த மனுவில், இந்தியத் தேர்தல் ஆணையம், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மற்றும் பிற தேர்தல் ஆணையர்களான சுக்பீர் சிங் சந்து, விவேக் ஜோஷி ஆகியோர் எதிர் தரப்பினராக சேர்க்கப்பட்டுள்ளனர்.
முன்னதாக இந்த விவகாரம் தொடர்பாக தலைமை நீதிபதி சூர்ய காந்தை நேரில் சந்தித்து மனு அளிக்க ராகுல் காந்தியும் மல்லிகார்ஜுன கார்கேவும் நேரம் கேட்டனர். ஆனால், வழக்குகள் ஏற்கனவே நீதிமன்றத்தின் பரிசீலனையில் இருப்பதால், தனிப்பட்ட முறையில் சந்திக்க மறுத்த தலைமை நீதிபதி, முறையாக மனுத்தாக்கல் செய்யுமாறு கடிதம் வாயிலாக தெரிவித்திருந்தார்.
அதன்படி, பேரணியின் முடிவில் ராகுல் காந்தி சார்பில் அவரது வழக்கறிஞர் எஸ். பிரசன்னா நீதிமன்றத்தில் இந்த ரிட் மனுவை தாக்கல் செய்தார்.