சத்தீஸ்கர் மாநிலத்தின் சர்குஜா மாவட்டத்தில் உள்ள மைன்பாட் மலைப் பகுதியில் வசிக்கும் பழங்குடியின பெண் சுக்மானியா பாய்.
இவரின் 90 வயது மாமியாருக்கு ரூ.1500 முதியோர் பென்ஷன் வருகிறது. நேரில் வந்து பயிமெட்ரிக் முறையில் கைரேகையை பதிவு செய்தால் மட்டுமே பென்ஷன் பணம் வழங்க முடியும் என வங்கி அதிகாரிகள் கெடுபிடி காட்டுவதால் நடக்க முடியாத வயதில் 90 வயது மாமியாரை சுக்மானியா பாய் மாதமொருமுறை வங்கிக்கு தோளில் சுமந்து செல்கிறார்.
முறையான சாலை வசதிகள் இல்லாத அந்த குக்கிராமத்தில் இருந்து கொளுத்தும் வெயிலில் அடர்ந்த காட்டுப் பகுதிகள் மற்றும் ஓடைகளைக் கடந்து சுமார் 9 கிலோமீட்டர் தூரம் மாமியாரை தனது தோளிலேயே சுமந்து செல்கிறார் சுக்மானியா பாய்.
இதற்கு முன்பு முதியோர்களுக்கான ஓய்வூதியத் தொகை அந்தந்த கிராமங்களிலேயே உள்ளூர் அதிகாரிகள் மூலம் நேரடியாக விநியோகம் செய்யப்பட்டு வந்தது.
ஆனால், முறைகேடுகளை தடுப்பதாக கூறி அரசு கொண்டு வந்த புதிய டிஜிட்டல் வங்கி கணக்கு மற்றும் பயோமெட்ரிக் சரிபார்ப்பு முறையினால்தான் இந்த இக்கட்டான சூழல் உருவாகியுள்ளது.
சுக்மானியா பாய் தனது மாமியாரை முதுகில் சுமந்து செல்லும் வீடியோ வைரலான நிலையில் மக்களின் இன்னல்களை புரிந்துகொள்ள முடியாத வறட்டு அதிகாரிகளுக்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன.