இந்தியா

கேரளாவின் கோட்டயத்தில் நிலச்சரிவு: சென்னையை சேர்ந்த பெண் உயிரிழப்பு

பலத்த மழையைத் தொடர்ந்து, பல இடங்களில் சிறிய அளவிலான நிலச்சரிவுகள் ஏற்பட்டது.

கேரளாவின் கோட்டயம் மாவட்டம் டீக்கோய் அருகில் உள்ள வேலாத்துசேரி பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில், சென்னையை சேர்ந்த பெண் ஒருவர் உயிரிழந்தார்; அவரது தோழி காயமடைந்தார் என்று காவல்துறையினர் தெரிவித்தனர். உயிரிழந்தவர் சென்னையின் ஜவஹர் நகரை சேர்ந்த சங்கீதா அருள் லால் (35) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மாவட்டத்தின் சுற்றுலா தலமான வாகமனுக்கு சென்றுவிட்டு திரும்பிக்கொண்டிருந்தபோது, ​​இந்த நிலச்சரிவு ஏற்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். சங்கீதாவும் அவரது தோழியும் (இவரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்) இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தனர்.

காவல்துறையினர் விளக்கம்:

சாலையில் சரிந்து விழுந்த மண்ணில் சங்கீதா சிக்கிக்கொண்டார். காயங்களுடன் தப்பிய அவரது தோழி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார் என்று காவல்துறையினர் கூறினர்.

உள்ளூர் மக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, மண்ணை அகற்றி சங்கீதாவை மீட்க முயன்றனர். பின்னர் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

காயமடைந்த பெண்ணின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், அவரது குடும்பத்தினரை தொடர்பு கொண்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

சிறிய அளவிலான நிலச்சரிவுகள்:

கோட்டயம் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் பெய்த பலத்த மழையைத் தொடர்ந்து, பல இடங்களில் சிறிய அளவிலான நிலச்சரிவுகள் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். டீக்கோய் அருகிலுள்ள மங்களகிரி பகுதியில் ஏற்பட்ட மற்றொரு சிறிய நிலச்சரிவில் வீடுகள் சேதமடைந்தன.

பூஞ்சார் தெக்கேகரா பஞ்சாயத்துக்கு உட்பட்ட பெரிங்குளம்பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒரு வீடு சேதமடைந்தது; இதில் ஒருவர் காணாமல் போனார், இருவர் மீட்கப்பட்டனர் என்று காவல்துறையினர் தெரிவித்தனர். காணாமல் போன நபரைத் தேடும் பணி நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT