இந்தியா

புயல் எச்சரிக்கை காரணமாக டெல்லி பயணத்தை ரத்து செய்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு

நவம்பர் 3-ஆம் தேதி காலையில் பாபட்லா அருகே கரையை கடக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆந்திர பிரதேச மாநிலத்தில் மற்றொரு புயல் அச்சுறுத்தல் உருவாகியுள்ள நிலையில், முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு இன்று (திங்கள் கிழமை) திட்டமிடப்பட்டிருந்த தனது டெல்லி பயணத்தை ரத்து செய்தார்.

மேலும், அதன் தாக்கத்தை சமாளிக்க அதிகாரிகள் முழுமையாக தயாராக இருக்குமாறு அறிவுறுத்தினார். அர்னாப் புயலை தொடர்ந்து, புயல் தயார்நிலை மற்றும் நிவாரணம், சீரமைப்பு பணிகள் குறித்து முதலமைச்சர் ஆய்வுக் கூட்டம் நடத்தினார்.

புதிய புயல்:

தற்போது நிலவும் காற்றழுத்த தாழ்வுநிலை, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுநிலையாக வலுப்பெற்று, பின்னர் புயலாக உருவாக வாய்ப்புள்ளது என அதிகாரிகள் முதலமைச்சரிடம் தெரிவித்தனர். இது நவம்பர் 2-ஆம் தேதிக்குள் மேற்கு-மத்திய வங்காள விரிகுடா பகுதியில் கடுமையான புயலாக வலுப்பெறும் என்றும், நவம்பர் 3-ஆம் தேதி காலையில் பாபட்லா அருகே கரையை கடக்கக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

புயல் கரையை கடக்கும் நேரத்தில் மணிக்கு 100-110 கி.மீ. வேகத்தில் காற்று வீச வாய்ப்புள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர். புயல் காரணமாக, நவம்பர் 2 ஆம் தேதி தெற்கு கடலோர மற்றும் மத்திய கடலோர மாவட்டங்களில் மிதமான முதல் கனமான மழையும், ஆங்காங்கே மிக கனமான மழையும் பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. நவம்பர் 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் பல பகுதிகளில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

ஏலூர் மாவட்டத்தில் 9, கிருஷ்ணா மாவட்டத்தில் 5, என்.டி.ஆர் மாவட்டத்தில் 5 மற்றும் பாபட்லா மாவட்டத்தில் 1 உட்பட, மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ள 20 மண்டலங்களை அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் உத்தரவு:

புயலுடன் வீசும் பலத்த காற்றினால் 12 மாவட்டங்களில் உள்ள ஏராளமான மின் கம்பங்கள் சேதமடையக்கூடும் என அதிகாரிகள் தெரிவித்தபோது, ​​இதுபோன்ற எதிர்பாராத நிகழ்வுகளை சமாளிக்க தேவையான மனிதவளம் மற்றும் உபகரணங்களுக்கு முன்கூட்டியே ஏற்பாடுகளை செய்யுமாறு முதலமைச்சர் அவர்களுக்கு உத்தரவிட்டார்.

புயல் நிலவரம் குறித்து ஒவ்வொரு நான்கு மணி நேரத்திற்கும் ஒருமுறை அறிக்கை வெளியிடுமாறு முதலமைச்சர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அலைபேசி இணைப்பில் ஏற்படும் தடங்கல்களை தடுக்க, தொலைத்தொடர்பு நிறுவனங்கள் முன்கூட்டியே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அவர் அறிவுறுத்தினார்.

SCROLL FOR NEXT