இந்தியா

பரந்தூர் விமான நிலைய திட்டத்தை மாற்றியமைக்க தமிழக அரசு கோரவில்லை- நாடாளுமன்றத்தில் மத்திய அரசு விளக்கம்!

தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்திற்கு மத்திய அரசு கொள்கை அளவிலான ஒப்புதலை அளித்தது.

பரந்தூர் விமான நிலையத்தை மாற்றியமைக்க தமிழக அரசு கோரவில்லை என விமான நிலையம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் தயாநிதிமாறன் எம்.பி. எழுப்பிய கேள்விக்கு, மத்திய அமைச்சர் பதில் அளித்துள்ளார்.

பரந்தூர் விமான நிலையம்

நாடாளுமன்ற மக்களவையில் தி.மு.க. எம்.பி. தயாநிதி மாறன், பரந்தூர் பசுமை விமான நிலையத்தை தொடர்வது, அதில் மாற்றங்கள் செய்வது அல்லது அதை திரும்பப் பெறுவது தொடர்பாக தமிழ்நாடு அரசிடம் இருந்து மத்திய அரசுக்கு ஏதேனும் கடிதம் வரப்பெற்றதா? என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்து மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் இணை அமைச்சர் முரளிதர் மோகல் கூறியதாவது:-

கடிதம் வரவில்லை

'பரந்தூர் பசுமை விமான நிலையத்தை மாற்றியமைப்பது அல்லது திரும்பப் பெறுவது தொடர்பாக தமிழ்நாடு அரசிடம் இருந்து மத்திய அரசுக்கு கடிதம் எதுவும் வரவில்லை.

7.4.2025 அன்று பரந்தூரில் பசுமை விமான நிலையத்தை அமைப்பதற்காக தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்திற்கு மத்திய அரசு கொள்கை அளவிலான ஒப்புதலை அளித்தது.

இந்த கொள்கையின்படி, விமான நிலைய திட்டங்களை செயல்படுத்துவதற்கான பொறுப்பு (மாநில அரசு திட்டத்தை முன்மொழிந்தவராக இருக்கும் பட்சத்தில்) சம்பந்தப்பட்ட மாநில அரசு உள்பட சம்பந்தப்பட்ட விமான நிலைய அமைப்பாளரையே சாரும்.

விமான நிலைய கட்டுமானத்துக்கான காலக்கெடு நிலம் கையகப்படுத்துதல். கட்டாய அனுமதிகள் பெறுதல், நிதி ஒருங்கிணைப்பு போன்ற பல காரணிகளைச் சார்ந்தே அமையும்' என பதில் அளித்தார்.

SCROLL FOR NEXT