இந்தியா

எகிறிய வெங்காய விலை: கிலோ ரூ.35-க்கு விற்க மத்திய அரசு நடவடிக்கை!

கவுகாத்தியில் இருந்து கந்தா எக்ஸ்பிரஸில் டெல்லிக்கு வரும் வெங்காயம்.

நாடு முழுவதும் சமையலுக்குப் பயன்படுத்தப்படும் மிக முக்கியமான உணவுப் பொருள்களில் ஒன்றான வெங்காயத்தின் விலை கடந்த சில நாட்களாகக் கடுமையாக உயர்ந்து வருகிறது. இது நடுத்தர மற்றும் ஏழை எளிய மக்களைப் பெரிதும் பாதித்துள்ளது.

சில்லறை விற்பனையில் 59% விலை உயர்வு

இந்தியாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததன் விளைவாக, முக்கிய வெங்காய உற்பத்தி மாநிலங்களில் விளைச்சல் வெகுவாகக் குறைந்துள்ளது.

இதனால் சந்தைகளுக்கு வரும் வெங்காயத்தின் வரத்து சரிந்து, நாடு முழுவதும் சில்லறை விற்பனையில் இதன் விலை சுமார் 59 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.

தமிழகத்தைப் பொறுத்தவரை, சென்னையில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.80 முதல் ரூ.100 வரை விற்கப்படுவதால் பொதுமக்கள் கவலையடைந்துள்ளனர்.

டெல்லி வந்தடைந்த 'கந்தா எக்ஸ்பிரஸ்'

வெங்காய விலையைக் கட்டுப்படுத்தவும், பொதுமக்களுக்குக் குறைந்த விலையில் தடையின்றி வெங்காயம் கிடைக்கவும் மத்திய அரசு தற்போது அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி, மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் இருந்து 'கந்தா எக்ஸ்பிரஸ்' சிறப்பு சரக்கு ரயில் மூலம் முதற்கட்டமாக 400 டன் வெங்காயம் டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டது.

மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை செயலாளர் நிதி காரே இந்த மானிய விலை வெங்காய விநியோகப் பணியைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

கிலோ ரூ.35-க்கு மானிய விலை வெங்காயம்

மத்திய அரசின் இந்த வெங்காயங்கள் நுகர்வோர் கூட்டுறவு அமைப்புகளான, இந்திய தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு மற்றும் நாபெட் ஆகியவற்றின் நடமாடும் வாகனங்கள் மற்றும் சில்லறை விற்பனை நிலையங்கள் மூலம் ஒரு கிலோ ரூ.35 என்ற மானிய விலையில் பொதுமக்களுக்கு நேரடி விற்பனை செய்வதற்காக மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

விரைவில் சென்னை, மதுரைக்கு சிறப்பு ரயில்கள்!

தலைநகர் டெல்லியைத் தொடர்ந்து, விலை அதிகமாக உள்ள நாட்டின் பிற முக்கிய நகரங்களுக்கும் சிறப்பு சரக்கு ரயில்கள் மூலம் வெங்காயத்தை விநியோகிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

அதன்படி, சென்னை, மதுரை, எர்ணாகுளம் (கொச்சி) மற்றும் கவுகாத்தி ஆகிய நான்கு முக்கிய மையங்களுக்கு விரைவில் 'கந்தா எக்ஸ்பிரஸ்' ரயில்கள் மூலம் வெங்காயம் கொண்டு வரப்பட்டு, பொதுமக்களுக்கு மலிவு விலையில் விநியோகம் செய்யப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனால் தமிழகத்தில் விரைவில் வெங்காய விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.