இந்தியா

மாநிலங்களுக்கு 2 லட்சம் கோடி வட்டியில்லா கடன்: மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு!

சொந்தச் செலவுக்குப் பயன்படுத்தக் கூடாது என நிபந்தனை; அடுத்த மாதத்திற்குள் மேலும் ரூ.70,000 கோடி விடுவிப்பு.

மத்திய அரசு 'மூலதன செலவு கடன் திட்டம்' என்ற பெயரில் மாநிலங்களுக்கு கடன் வழங்குகிறது. இந்த கடனுக்கு மாநில அரசு எந்த வட்டியும் மத்திய அரசிற்கு கட்ட தேவையில்லை.

மத்திய அரசு நடப்பு நிதியாண்டிற்கான மொத்த தொகையான ரூ.2 லட்சம் கோடியில், 45% தொகையை ( சுமார் ரூ.90,000 கோடி) இந்த ஆண்டின் முதல் காலாண்டிலேயே மாநிலங்களுக்கு வழங்க முடிவு செய்துள்ளது.

மாநிலங்களுக்கு ரூ.20,000 கோடி நிதி ஏற்கனவே வட்டியில்லா கடனாக விடுவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அடுத்த மாத இறுதிக்குள் மேலும் ரூ.70,000 கோடி விடுவிக்கப்பட உள்ளது.

இந்த கடனை மாநில அரசு 50 ஆண்டிற்குள் திருப்பி செலுத்த வேண்டும்.

இந்த தொகையை சொந்த பயன்பாட்டிற்கு பயன்படுத்த கூடாது என்றும் கூறியுள்ளது.

பொதுவாக இந்த தொகை மக்களுக்கு தேவையான அடிப்படை கட்டமைப்புகளுக்கு ஆதாரமான ரெயில்வே, நெடுஞ்சாலைகள், மெட்ரோ ரெயில், குடிநீர் வழங்கல் மற்றும் மின் திட்டங்களை செயல் படுத்துவதற்காக பயன்படுத்தப்படுகின்றன.

கடந்த 2025-26 நிதியாண்டில், ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில் ரூ.40,000 கோடி மாநிலங்களுக்கு வழங்கப்பட்டிருந்தது. அந்த முழு நிதியாண்டிலும் ஒதுக்கப்பட்ட நிதி, நாடு முழுவதும் 9,000-க்கும் மேற்பட்ட உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு வெற்றிகரமாகப் பயன்படுத்தப்பட்டது.