மல்லிகார்ஜுன கார்கே 
இந்தியா

மத்திய அரசு செயல்படுவது குறைவு, விளம்பரம் செய்வது அதிகம்- மல்லிகார்ஜுன கார்கே குற்றச்சாட்டு

2013-ல் ரூ.414-ஆக இருந்த சமையல் எரிவாயு இன்று ரூ.1000-த்தை எட்டியுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

மாலை மலர்

புது தில்லி: 

மத்திய அரசு செயல்படுவது குறைவு, விளம்பரம் செய்வது அதிகம் என காங்கிரஸை சேர்ந்த மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் பேசியதாவது:-

மத்திய அரசின் பல திட்டங்களில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கவில்லை. பொருளாதாரம், தற்சார்பு, சீனக் கொள்கை என அனைத்திலும் ஒன்றன்பின் ஒன்றாக மத்திய அரசு தோல்வியடைந்து வருகிறது.

சீர்திருத்தங்கள், நலத் திட்டங்கள் குறித்து மத்திய அரசு பேச மட்டும்தான் செய்கிறது. களத்தில் அதன் செயல்பாடுகள் ஒன்றுமில்லை. ஆனால் விளம்பரம் மட்டும் அதிகமாக செய்துகொள்கிறது. அதை எதிர்க்கட்சிகள் விமர்சிக்கும்பட்சத்தில் உடனடியாக மதம் குறித்து பேசி, அது ஆபத்தில் இருப்பதாக திசை திருப்புகிறது.

முதலீடுகள் இல்லாமல், தொழிற்சாலைகள் மூடப்பட்டு வேலைவாய்ப்புகளுக்கு பற்றாக்குறை நிலவுகிறது.  லாபகரமாக இயங்கி வரும் பொதுத் துறை நிறுவனங்களை தனியார்மயமாக்குகிறது. பொதுத் துறை நிறுவனங்கள் இல்லாமல் போகும்பட்சத்தில் வேலைவாய்ப்புகள் மேலும் குறைந்துவிடும். தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடிகள், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு பலனளிக்கும் இடஒதுக்கீடும் அழிந்துவிடும்.

கடந்த 2015 முதல் 2020 -ஆம் ஆண்டு வரை தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிரான குற்றங்கள் 30 சதவீதமும், பழங்குடிகளுக்கு எதிரான குற்றங்கள் 26 சதவீதமும் அதிகரித்துள்ளது. மத சகிப்பின்மை குறைந்துவிட்டது. 500-க்கும் மேற்பட்ட தேவாலையங்கள் மீது தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன. கர்நாடக அரசு மதமாற்றதடைச் சட்டத்தை அமல்படுத்தியது. அதன்பின் கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல்களும் அதிகரித்துள்ளன.

இந்திய விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக்கப்படும் என மத்திய அரசு வாக்குறுதி அளித்து அதை நிறைவேற்றவில்லை.  கடந்த 12 ஆண்டுகளில் இல்லாத அளவாக 2021-ஆம் ஆண்டு பணவீக்கம்14.23 சதவீதத்தை எட்டியது. ஆனால் மத்திய அரசு பணவீக்கம் உயரவில்லை என பொய் கூறுகிறது. 2013-ல் ரூ.414-ஆக இருந்த சமையல் எரிவாயு இன்று ரூ.1000-த்தை எட்டியுள்ளது.

116 நாடுகள் அடங்கிய பட்டினி குறியீடு பட்டியலில் இந்தியா 101-ஆவது இடத்தில் உள்ளது.  நாட்டில் செல்வந்தர்கள், நடுத்தர வர்க்கத்தினர், விளிம்புநிலையில் உள்ள மக்களுக்கு இடையிலான வருமான இடைவெளியை குறைக்க எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. பணக்கார வர்க்கத்தினர் மட்டுமே மத்திய அரசு கொள்கைகளால் பயன் பெறுகின்றனர்.

நமக்குச் சொந்தமான நிலங்களை பறித்து சீனா ஒரு கிராமத்தையே உருவாக்கியுள்ளது. எல்லையில் பாலங்களை சீனா கட்டி வருகிறது. அதுகுறித்து மத்திய அரசு பேச கூட மறுக்கிறது.

இவ்வாறு மல்லிகார்ஜுனே கார்கே கூறினார்.

இதையும் படியுங்கள்...இலங்கைக்கு 40,000 மெட்ரிக் டன் பெட்ரோல், டீசல் வழங்க இந்தியன் ஆயில் நிறுவனம் முடிவு