இந்தியா

ஏவுகணைத் தயாரிப்பை தனியாரிடம் ஒப்படைக்கும் மத்திய அரசு... முதற்கட்டமாக அஸ்ட்ரா மார்க் 2 , பிரளய் திட்டங்கள் ஒப்படைப்பு?

முதற்கட்டமாக அஸ்ட்ரா மார்க் 2 ஏவுகணையை உற்பத்தி செய்யும் தனியார் நிறுவனங்கள்.

இந்தியாவில் விமானங்கள், பீரங்கிப்படை, கடற்படைத்தளங்கள் போன்ற துறைகள் ஏற்கனவே தனியார்மயமாக இருக்கும் நிலையில், தற்போது ஏவுகணை தயாரிப்பையும் தனியார் வசம் ஒப்படைக்க மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதன் மூலம் அதானி, டாடா, மஹிந்திரா, பாரத் ஃபோர்ஜ் மற்றும் ஐகாம் போன்ற முன்னணி தனியார் கூட்டு நிறுவனங்கள் ஏவுகணைகளைத் தயாரிப்பதற்கான அனுமதியைப் பெறவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்திய ஆயுதப் படைகள் மற்றும் நட்பு நாடுகளிடமிருந்து உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் ஏவுகணைகளுக்கான தேவை கணிசமாக அதிகரித்துள்ளது.

இந்தோனேசியா போன்ற வெளிநாடுகள் இந்தியாவின் அஸ்ட்ரா ஏவுகணைகளை வாங்க விருப்பம் தெரிவித்துள்ளதால், உற்பத்தியை பன்மடங்கு பெருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

பொதுத்துறை நிறுவனமான பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் (BDL) நிறுவனத்தால் இந்த அதீத தேவையை முழுமையாகப் பூர்த்தி செய்ய இயலாததே இந்த முடிவுக்கு காரணம் என கூறப்படுகிறது.

அஸ்ட்ரா மார்க் 2-ஐ உற்பத்தி செய்யும் தனியார் நிறுவனங்கள்

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) உருவாக்கிய, 180-200 கி.மீ தூரம் வரை பாய்ந்து சென்று தாக்கும் அதிநவீன அஸ்ட்ரா மார்க் 2 ஏவுகணையைத் தயாரிக்க தனியார் நிறுவனங்களுக்கு விரைவில் ஒப்பந்தம் வழங்கவுள்ளதாக கூறப்படுகிறது.

அஸ்ட்ரா திட்டத்தைத் தொடர்ந்து, குறுகிய தூரப் பாலிஸ்டிக் ஏவுகணையான பிரளய் ஏவுகணையின் தொழில்நுட்பமும் தனியார் நிறுவனங்களுக்கு மாற்றப்படத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ஏவுகணை சுமார் 500 கி.மீ. தூரம்வரை பாயும் திறன்கொண்டது. இது ஒலியின் வேகத்தைப் போல் ஆறு மடங்கு வேகத்தில் பயணிக்கக்கூடிய இரு-கட்ட ஏவுகணையாகும்.

உள்நாட்டு உற்பத்தியை மேம்படுத்தும் நோக்கில், அண்மையில் மத்தியப் பிரதேசத்தின் சிவபுரியில் ரூ.2,500 கோடி முதலீட்டில் தெற்காசியாவின் மிகப்பெரிய தனியார் ஏவுகணை உற்பத்தி மையத்தை அமைப்பதற்கான பணிகளை அதானி டிஃபென்ஸ் அண்ட் ஏரோஸ்பேஸ் நிறுவனம் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.