நாட்டில் சர்க்கரை விலை சற்று குறைந்துள்ள நிலையில், தொழிற்சாலைகள் உள்ளிட்ட மொத்தமாக சர்க்கரை பயன்படுத்தும் நிறுவனங்கள் வைத்திருக்க அனுமதிக்கப்படும் சர்க்கரை கையிருப்பை மத்திய அரசு 15 நாட்களில் இருந்து 30 நாட்களாக உயர்த்தியுள்ளது.
கடந்த ஆகஸ்டு மாதத்தில் சர்க்கரையின் சில்லரை விலை கிலோ ரூ.65 வரை உயர்ந்த நிலையில், தற்போது அது சுமார் ரூ.58.50 ஆக குறைந்துள்ளது. அதேநேரத்தில், ஆலை விலையும் சுமார் 25 சதவீதம் குறைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
புதிய விதிமுறையின்படி, கூடுதலாக அனுமதிக்கப்படும் 15 நாட்களுக்கான சர்க்கரை இருப்பு, முன் அனுமதி திட்டம் அல்லது சுங்க வரி விகித ஒதுக்கீட்டின் திட்டங்களின் கீழ் இறக்குமதி செய்யப்பட்ட சர்க்கரையாக இருக்க வேண்டும்.
மாதத்திற்கு 10 மெட்ரிக் டன்னுக்கும் அதிகமாக சர்க்கரையைப் பயன்படுத்தும் மொத்த நுகர்வோர், ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தங்களிடம் உள்ள சர்க்கரை இருப்பு விவரங்களை உணவு மற்றும் பொது விநியோகத் துறையின் ஆன்லைன் தளத்தில் பதிவு செய்ய வேண்டும்.
பண்டிகை காலத்தை முன்னிட்டு தொழிற்சாலைகள் உள்ளிட்ட மொத்த நுகர்வோர் கூடுதல் சர்க்கரை இருப்பு வைத்திருக்க அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்த நிலையில், மத்திய அரசு இந்த தளர்வை அறிவித்துள்ளது.
சர்க்கரை விலை குறைந்ததன் பலன் சில்லரை சந்தையிலும் முழுமையாக நுகர்வோருக்கு சென்றடையவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மேலும், 2026 அக்டோபர் 1-ந்தேதி தொடங்கும் புதிய சர்க்கரை பருவத்தில் கரும்பு விவசாயிகளுக்கான நியாயமான மற்றும் ஆதாய விலை குவிண்டாலுக்கு ரூ.365 ஆக உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.