இந்தியா

பெட்ரோகெமிக்கல் பொருட்கள் இறக்குமதிக்கு ஜூன் 30-ந்தேதி வரை வரிவிலக்கு

மேற்கு ஆசியாவில் நடைபெற்று வரும் போர் இந்திய பொருளாதாரம், குறிப்பாக பெட்ரோகெமிக்கல் மற்றும் உரத் துறைகளுக்கு நேரடி தாக்கத்தை ஏற்படுத்தியது.

மேற்கு ஆசியாவில் ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான மோதல் தீவிரமடைந்து. அதில் அமெரிக்கா தலையீடும் நிலை ஏற்பட்டது. இதன் விளைவாக ஏற்பட்ட போர் காரணமாக உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதில் மிக முக்கியமானது ஹார்முஸ் நீரிணை ஆகும். உலகின் 20 சதவீதம் கச்சா எண்ணெய் இந்த நீரிணை வழியாகவே கொண்டு செல்லப்படுகிறது. இந்தப் பகுதி மூடப்பட்டதால் இந்தியாவின் எண்ணெய் இறக்குமதி செலவு கடுமையாக உயந்தது.

இது நேரடியாக வணிக சிலிண்டர் விலை, எரிபொருள் விலை உயர்வுக்கு வழிவகுத்தது. பெட்ரோகெமிக்கல் தொழில்கள் மூலப்பொருள் பற்றாக்குறையை சந்தித்து வருகிறது. இதனால் உரம் உற்பத்தி, பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இந்த போர் இந்திய பொருளாதாரம், குறிப்பாக பெட்ரோகெமிக்கல் மற்றும் உரத் துறைகளுக்கு நேரடி தாக்கத்தை ஏற்படுத்தியது.

மேற்கு ஆசியாவில் நடைபெற்று வரும் போரால் உலகளாவிய விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சமாளிக்கும் வகையில், முக்கியமாக பெட்ரோகெமிக்கல் பொருட்களின் இறக்குமதிக்கு விதிக்கப்பட்டிருந்த சுங்க வரியை மூன்று மாதங்களுக்கு, அதாவது ஜூன் 30-ந்தேதி வரை, மத்திய அரசு விலக்கு அளித்து அறிவித்துள்ளது.

இந்த நடவடிக்கை மூலம் பிளாஸ்டிக், பேக்கேஜிங், துணிநூல், மருந்து, ரசாயனம், ஆட்டோமொபைல் கூறுகள் உள்ளிட்ட பெட்ரோகெமிக்கல் மூலப்பொருட்களையே சார்ந்த தொழில்கள் பலனடையும். இந்த வரிவிலக்கு காரணமாக அரசுக்கு ரூ.1,800 கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என கணிக்கப்படுகிறது.

நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், மேற்கு ஆசியப் பகுதியில் நிலவி வரும் போர் மற்றும் அதனால் உலகளாவிய விநியோகத்தில் ஏற்பட்டுள்ள தடைகள் காரணமாக, உள்நாட்டு தொழில்களுக்கு தேவையான முக்கிய பெட்ரோகெமிக்கல் உள்ளீடுகளின் தொடர்ந்து கிடைப்பதை உறுதி செய்யும் நோக்கில் இந்த தற்காலிக மற்றும் இலக்கு சார்ந்த நிவாரண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.

இதன் மூலம் இறுதி பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்தவும், நுகர்வோருக்கு நிவாரணம் அளிக்கவும் உதவும் என்று கூறப்பட்டுள்ளது. சுங்க வரி விலக்கு வழங்கப்பட்டுள்ள பொருட்களில் மெத்தனால், அன்ஹைட்ரஸ் அமோனியா, டோலுயீன், ஸ்டைரீன், டைக்ளோரோமேத்தேன் (மெத்திலீன் குளோரைடு), வினைல் குளோரைடு மோனோமர், பாலி பியூட் டடைன், ஸ்டைரீன் பியூட்டடைன் மற்றும் செறிவற்ற பாலிஸ்டர் ரெசின்கள் அடங்கும்.