பாஸ்போர்ட்  
இந்தியா

பாஸ்போர்ட் பெறும் நடைமுறையில் புதிய மாற்றம் செய்த மத்திய அரசு

8 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு புதிய பாஸ்போர்ட் பெறுவதில் 10 சதவீத தள்ளுபடி வழங்கப்படும்

குழந்தைகளுக்கு பாஸ்போர்ட் பெறுவதில் மாற்றங்களை செய்து மத்திய வெளியுறவு அமைச்சகம் 'கடவுச்சீட்டு (திருத்த) விதிகள், 2026'-ஐ அறிவித்துள்ளது.

இந்த புதிய விதிகள், செப்டம்பர் 15ஆம் தேதியன்று அதிகாரப்பூர்வ அரசிதழில் வெளியிடப்பட்ட உடனேயே நடைமுறைக்கு வந்தன.

குழந்தைகளுக்கு

15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட பாஸ்போர்ட், 5 ஆண்டுகள் அல்லது குழந்தைக்கு 15 வயது பூர்த்தியாகும் வரை (இவற்றில் எது முந்துகிறதோ அதுவரை) மட்டுமே செல்லுபடியாக இருந்தது.

புதிய விதியின்படி 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான வழக்கமான 36 பக்க பாஸ்போர்ட் இனி அது வழங்கப்பட்ட தேதியிலிருந்து ஐந்து ஆண்டுகளுக்கு அல்லது குழந்தைக்கு 18 வயது பூர்த்தியாகும் வரை செல்லுபடியாகும். இதில் எது முதலில் வருகிறதோ அதுவே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.

வயது வரம்பு 15ல் இருந்து 18 வயதாக உயர்த்தப்பட்டுள்ளது.

உதாரணமாக 14 வயதில் பாஸ்போர்ட் பெறும் ஒரு குழந்தைக்கு, 5 ஆண்டுகள் நிறைவடையாவிட்டாலும் 18 வயது பூர்த்தியாகும் போதே அந்த பாஸ்போர்ட்டின் செல்லுபடியாகும் காலம் முடிவுக்கு வந்துவிடும்.

8 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்குப் புதிய பாஸ்போர்ட் பெறுவதில் 10 சதவீத தள்ளுபடி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கட்டணம் உயர்வு

முன்னதாக ஜூலை 1 முதல் அமலுக்கு வந்த விதிகளின்படி, முன்பு 1,500 ரூபாயாக இருந்த பெரியவர்களுக்கான 36 பக்க பாஸ்போர்ட்டின் கட்டணம் இப்போது ரூ. 2,500 ஆக உயர்ந்துள்ளது. முன்பு 2,000 ரூபாயாக இருந்த 60 பக்க பாஸ்போர்ட்டின் கட்டணம் இப்போது ரூ. 3,500 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், முன்பு 3,500 ரூபாயாக இருந்த 36 பக்க 'தட்கல்' பாஸ்போர்ட்டுக்கான கட்டணம் இப்போது ரூ. 5,000ஆக உயர்ந்துள்ளது. முன்பு 4,000 ரூபாயாக இருந்த 60 பக்க 'தட்கல்' பாஸ்போர்ட்டுக்கான கட்டணம் இப்போது ரூ. 6,000 ஆக உயர்ந்துள்ளது.

60 பக்க பாஸ்போர்ட் தொலைந்துபோனாலோ அல்லது சேதமடைந்தாலோ அதை உடனடியாக மாற்றுவதற்கான கட்டணம் 5,500 ரூபாயில் இருந்து ரூ. 8,500 ஆக உயர்ந்துள்ளது.

சிறார்களுக்கு 36 பக்கங்கள்கொண்ட சாதாரண பாஸ்போர்ட் கட்டணம் 1,000 ரூபாயில் இருந்து 1,750 ரூபாயாகவும் 36 பக்கங்கள் தட்கல் பாஸ்போர்ட் கட்டணம் 3,000 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது.

SCROLL FOR NEXT