இந்தியா

ரேவந்த் ரெட்டி அமெரிக்கா செல்ல மத்திய அரசு அனுமதி மறுப்பு!

பயணம் ரத்து செய்யப்பட்டதால் ஆக.23ம் தேதியே ஹைதராபாத் திரும்புகிறார்.

தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி அமெரிக்கா செல்வதற்கு மத்திய வெளியுறவு அமைச்சகம் அனுமதி மறுத்துள்ளது.

இது தொடர்பாக தெலங்கானா முதலமைச்சர் அலுவலகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ தகவலின்படி, “அரசியல் ரீதியாக அனுமதி மறுக்கப்பட்டுவிட்டது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் தனது அமெரிக்க பயணத்தை ரேவந்த் ரெட்டி ரத்து செய்துள்ளார்.

தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி வெளிநாட்டிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இந்தப் பயணம் காரணமாகவே நேற்று தென்மண்டல கவுன்சில் கூட்டத்திலும் பங்கேற்கவில்லை.

தற்போது லண்டனில் உள்ளார். லண்டனிலிருந்து நியூயார்க் செல்ல திட்டமிட்டிருந்த நிலையில், அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் ஆக.30ம் தேதி இந்தியா திரும்ப இருந்த ரேவந்த் ரெட்டி, ஆக.23ம் தேதியே இந்தியா திரும்புகிறார்.

ரேவந்த் ரெட்டி எதிரொலி

மத்திய அரசின் இந்த முடிவை ரேவந்த் ரெட்டி விமர்சித்துள்ளார். “தேசத்தைக் கட்டியெழுப்புதல் மற்றும் இளைஞர்களின் எதிர்காலம் என்று வரும்போது, நாம் அரசியல் மற்றும் தேர்தல்களுக்கு அப்பால் சிந்திக்க வேண்டும்” என்று அவர் சாடியுள்ளார்.

இருப்பினும், தான் மத்திய அரசின் முடிவை ஏற்பதாகவும், ஆனால் தன்னுடன் வந்த தெலங்கானா அதிகாரிகள் குழு திட்டமிட்டபடி அமெரிக்கா சென்று அங்குள்ள கல்வி நிறுவனங்களுடன் ஒப்பந்தங்களை இறுதி செய்வார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.