இந்தியாவில் கடைசியாக 2011-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. சுதந்திரத்துக்கு பிறகு இதுவரை 7 கணக்கெடுப்புகள் நடந்துள்ளன. 8-வது கணக்கெடுப்பு கடந்த 2021-ம் ஆண்டே நடந்தியிருக்க வேண்டும். ஆனால் கொரோனா காரணமாக இது தள்ளிப்போனது.
இந்த நிலையில் 2027-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு மத்திய மந்திரி சபை கடந்த ஆண்டு ஒப்புதல் அளித்தது. இதற்காக ரூ.11 ஆயிரத்து 718 கோடி நிதி ஒதுக்கீட்டுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து மக்கள்தொகை கணக்கெடுப்புக்கான முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்றன.
அனைத்து ஏற்பாடுகளும் தயார் செய்யப்பட்டதை தொடர்ந்து மக்கள்தொகை கணக்கெடுப்பு பணி நாளை (புதன்கிழமை) தொடங்குகிறது.
இதுகுறித்து நாட்டின் பதிவாளர் ஜெனரலும், மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையருமான மிருதுஞ்சய் குமார் நாராயண் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். சுயவிவர கணக்கெடுப்பு மற்றும் வீட்டு பட்டியல் கணக்கெடுப்பு என 2 கட்டமாக மக்கள்தொகை கணக்கெடுப்பு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில் சுயவிவர கணக்கெடுப்பு நாளை தொடங்குகிறது. நாளை தொடங்கும் இந்த கணக்கெடுப்பு மாநிலங்கள் வாரியாக உரிய காலக்கெடுவில் நடத்தப்படுகிறது.
அந்தமான் நிக்கோபார் தீவுகள், டெல்லி மாநகரப்பகுதி மற்றும் டெல்லி கண்டோன்மென்ட் போர்டு, கோவா, கர்நாடகம், லட்சத்தீவு, மிசோரம், ஒடிசா மற்றும் சிக்கிம் ஆகிய பகுதிகளில் நாளை முதல் வருகிற 15-ந் தேதி வரை சுய விவர கணக்கெடுப்பும், ஏப்ரல் 16-ந்தேதி முதல் மே 15-ந்தேதி வரை வீட்டுப் பட்டியல் மற்றும் வீட்டுவசதி கணக்கெடுப்பும் நடத்தப்படும்.
ஜம்மு காஷ்மீர், லடாக் மற்றும் புதுச்சேரியில் மே மாதம் 17-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை சுயவிவரக் கணக்கெடுப்பும், ஜூன் 1-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை வீட்டுப்பட்டியல் கணக்கெடுப்பும் நடைபெறுகிறது.
மேற்கு வங்காளத்தில் கணக்கெடுப்புக்கான தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை. ஜார்கண்ட் மாநிலத்தில் கணக்கெடுப்பு நடத்துவதற்கான நோட்டீஸ் தற்போதுதான் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த கணக்கெடுப்பின் அனைத்து பணிகளையும் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 31-ந்தேதிக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கணக்கெடுப்பு பணியில் சுமார் 31 லட்சம் பணியாளர்கள் ஈடுபட உள்ளனர்.
மக்கள்தொகை கணக்கெடுப்பு டிஜிட்டல் முறையில் நடத்தப்படுகிறது. கணக்கெடுப்பாளர்கள் தங்களது ஸ்மார்ட்போனை பயன்படுத்தி, மொபைல் செயலி மூலம் நேரடியாக தரவுகளைச் சேகரித்துச் சமர்ப்பிப்பார்கள். இது தவிர, 2 கட்டங்களிலும் சுய கணக்கெடுப்புக்கான ஆன்லைன் வசதியும் இருக்கும். மொபைல் செயலி மற்றும் சுய கணக்கெடுப்பு இணையதளம் ஆகியவை இந்தி மற்றும் ஆங்கிலம் உள்பட 16 மொழிகளில் கிடைக்கும்.
சுயவிவர கணக்கெடுப்புக்காக, பதிலளிப்பவர்கள் தங்கள் செல்போன் எண் மற்றும் பிற அடிப்படை விவரங்களைப் பயன்படுத்தி சுய கணக்கெடுப்பு இணையதளத்தில் உள்நுழைந்து, தங்களுக்கு வசதியான நேரத்தில் கணக்கெடுப்புப் படிவத்தைப் பூர்த்தி செய்யலாம்.
இதனை வெற்றிகரமாக சமர்பித்தவுடன், ஒரு தனித்துவமான சுய கணக்கெடுப்பு அடையாள எண் உருவாக்கப்படும். அதனை, களப்பயணத்தின்போது கணக்கெடுப்பாளரிடம் பகிர்ந்துகொள்ள வேண்டும். சுய கணக்கெடுப்பு முறையானது, கணக்கெடுப்பாளர் வருவதற்கு முன்பு, ஒருவர் தனது சொந்த வசதிக்கேற்ப தகவல்களை நிரப்புவதற்கான நெகிழ்வுத்தன்மையை வழங்குகிறது.
முந்தைய கணக்கெடுப்புகளைப் போலவே, கணக்கெடுப்பாளர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வட்டாரங்களில் வீடு வீடாகச்சென்று கணக்கெடுப்பைத் தொடர்ந்தாலும், இந்த புதிய முறை பதிலளிப்பவர்களுக்கு வழங்கப்படும் ஒரு கூடுதல் வசதியாக உள்ளது.
இதுபோன்ற பல தகவல்களை மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையர் தெரிவித்தார்.