பல்வேறு தரப்பினர்களின் எதிர்ப்புகளைத் தொடர்ந்து, 9 ஆம் வகுப்பு கலைக் கல்வி பாடப்புத்தகத்தில் மொஹஞ்சதாரோவின் வரலாற்றுச் சிறப்புமிக்க 'நடனமாடும் பெண்' வெண்கலச் சிலையின் அசல் புகைப்படத்தை மீண்டும் சேர்க்க, தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் முடிவு செய்துள்ளது.
அண்மையில் 9 ஆம் வகுப்புக்காக அறிமுகப்படுத்தப்பட்ட 'மதுரிமா' என்ற புதிய கலைக் கல்விப் பாடப்புத்தகத்தின் முதல் அத்தியாயத்தில், இந்தச் சிலையின் படம் திருத்தப்பட்டு வெளியிடப்பட்டது. அதாவது சிலையில் தெரியும் மார்பு மற்றும் பெண்ணுறுப்பு மறைக்கப்பட்டு, ஷாடோ (Shading) செய்யப்பட்டிருந்தது.
காரணம், இந்த வயதுக் குழந்தைகளுக்கு (9 ஆம் வகுப்பு) நிர்வாணச் சிலையின் உண்மைப்படத்தை அப்படியே காட்டுவது நன்றாக இருக்காது என்ற காரணத்தால் மாற்றம் செய்யப்பட்டதாக கூறப்பட்டது.
இதற்கு வரலாற்று அறிஞர்கள், தொல்பொருள் ஆய்வாளர்கள், கல்வியாளர்கள் என பலதரப்பிலிருந்தும் கண்டனங்கள் வலுத்தன. ஒரு வரலாற்று கலைப்பொருளின் அசல் தன்மையை மாற்றுவது வரலாற்றுத் திரிபு என்றும், இந்த தணிக்கை தேவையற்றது என்றும் விமர்சித்தனர்.
மேலும், இதே சிலையின் அசல் படம் 6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் எவ்வித மாற்றமுமின்றி இடம்பெற்றிருக்கும் போது, 9 ஆம் வகுப்பில் ஏன் மாற்ற வேண்டும் என்றும் கேள்வி எழுப்பினர்.
இதனையடுத்து தற்போது அசல் படத்தையே மீண்டும் வைக்க என்சிஇஆர்டி இயக்குநர் தினேஷ் சக்லானி உத்தரவிட்டுள்ளார். பாடப்புத்தகத்தின் டிஜிட்டல் பதிப்பில் இந்தத் திருத்தம் உடனடியாக மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. இனிவரும் புதிய அச்சுப் பதிப்புகளிலும் அசல் புகைப்படமே இடம்பெறும் என்று தினேஷ் சக்லானி கூறியுள்ளார்.
4,000 ஆண்டுகளுக்கும் மேலான பழமை வாய்ந்த, 10.5 செ.மீ உயரமுள்ள இந்த வெண்கலச் சிலை, சிந்து சமவெளி நாகரிகத்தை வரையறுக்கும் கலைப் படைப்புகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
இந்தக் கலைப்பொருள் தற்போது டெல்லியில் உள்ள தேசிய அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளதுடன், தொடக்ககால இந்தியக் கலை மற்றும் கைவினைத்திறனுக்கு ஓர் எடுத்துக்காட்டாகப் பள்ளி பாடப்புத்தகங்களில் காட்டப்பட்டு வருகிறது.