இந்தியா

"தேசவிரோத சோரோஸ் ஏஜெண்டுகளுடன் கலந்துரையாடல்.." சிபிஎஸ்சி மாணவர்களை சந்தித்த வீடியோவை பகிர்ந்து ராகுல் பதிவு

அது தனது விடைத்தாளே அல்ல என்றும் எக்ஸ் தளத்தில் தெரிவித்திருந்தார்.

டெல்லியைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு சிபிஎஸ்இ மாணவனான வேதாந்த் ஸ்ரீவஸ்தவா இயற்பியல் தேர்வில் தான் பெற்ற மதிப்பெண்ணில் சந்தேகம் அடைந்து சரிபார்ப்புக்காக தனது விடைத்தாளை வழங்க வேண்டும் என விண்ணப்பித்திருந்தார்.

ஆனால் சிபிஎஸ்இ வாரியம் தனக்கு அனுப்பிய இயற்பியல் விடைத்தாளில் இருந்த கையெழுத்து தன்னுடையதல்ல என்றும் அது தனது விடைத்தாளே அல்ல என்றும் எக்ஸ் தளத்தில் தெரிவித்திருந்தார்.

வேதாந்தின் புகாரை ஏற்றுக்கொண்ட சிபிஎஸ்இ வாரியம், பின்னர் அவனுடைய உண்மையான விடைத்தாளை வழங்கிப் பிரச்சினையைத் தீர்த்தது.

சிபிஎஸ்இ விடைத்தாள்களை ஆன்லைனில் திருத்தும் OSM System முறையில் குளறுபடிகள் நிகழ்ந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

மறுபுறம், சமூக வலைத்தளங்களில் ஒரு தரப்பினர் வேதாந்த்தை குறிவைத்து பாஜக ஆதரவாளர்கள் வசைபாட தொடங்கினர்.

மோடி அரசை அவமதிப்பதற்காகச் செய்யப்பட்ட சதி இது எனவும், அந்த மாணவன் "தேசவிரோதி", "பாகிஸ்தானி", "ஜார்ஜ் சோரோஸின் ஏஜென்ட்" மற்றும் என்றும் பதிவிட்டு வசைபாடினர்.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட மாணவன் வேதாந்த், அவனது சகோதரன் மற்றும் நண்பர்களை நேரில் சந்தித்த மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, அவர்களுடன் உரையாடும் வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.

அதில், 'தேசவிரோத சோரோஸ் ஏஜெண்டுகளுடன் ஒரு கலந்துரையாடல்" என்று ராகுல் காந்தி அவர்கள் மீதான சமூக வலைத்தள விமர்சகர்களைக் கிண்டல் செய்யும் வகையில் குறிப்பிட்டிள்ளார்.

மேலும் அதில், "வேதாந்தும் அவனது நண்பர்களும் திறமையான, தைரியமான இளம் இந்தியர்கள். அவர்கள் சிபிஎஸ்இ மற்றும் மோடி அரசிடம் சில எளிய கேள்விகளைக் கேட்டனர்.

ஆனால், அதற்கு பதிலாக அவர்களுக்கு அவமானங்களே பரிசாகக் கிடைத்தன. அவர்கள் பிரகாசமான பாதுகாப்பான எதிர்காலத்திற்குத் தகுதியானவர்கள். அது அவர்களுக்குக் கிடைப்பதை நாங்கள் உறுதி செய்வோம்" என்று தெரிவித்துள்ளார்.