Dharmendra pradhan, Rahul gandhi 
இந்தியா

சிபிஎஸ்இ விவகாரம் - மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ் அதிரடி முழக்கம்!

அதிகாரிகளை மாற்றுவது வெறும் கண்துடைப்பு!".. மத்திய கல்வி அமைச்சரை நீக்கிவிட்டு நீதி விசாரணை நடத்த ராகுல் வலியுறுத்தல்.

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானைஉடனடியாகப் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி மீண்டும் தனது போராட்டத்தைக் கையில் எடுத்துள்ளது.

சிபிஎஸ்இ தேர்வுத் தாள் மதிப்பீட்டு முறைகேடுகள் அம்பலமாகியுள்ள நிலையிலும், கல்வி அமைச்சர் எவ்வித பொறுப்பும் ஏற்காமல் பதவியில் ஒட்டிக்கொண்டிருப்பதாகக் காங்கிரஸ் கடுமையாக விமர்சித்துள்ளது.

காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் தளத்தில், மோடி அரசை நோக்கிப் பல்வேறு அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சிபிஎஸ்இ தேர்வுத் தாள்களைக் கணினி மூலம் திருத்தும் ஆன்-ஸ்கிரீன் மார்க்கிங் சிஸ்டத்தை வாங்கியதில் பெரும் ஊழல் நடந்துள்ளதாகக் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

சர்தக் சித்தாந்த் என்ற 18 வயது மாணவர் இந்த டெண்டரில் நடந்த முறைகேடுகளை முதன்முதலில் சமூக வலைத்தளங்களில் அம்பலப்படுத்தினார். திக் விஜய் சிங் தலைமையிலான நாடாளுமன்றக் கல்விக் குழு இதுகுறித்து கேள்வி எழுப்பியபோது, சிபிஎஸ்இ நிர்வாகத்தால் முறையான பதில்களை வழங்க முடியவில்லை என ஜெய்ராம் ரமேஷ் சுட்டிக்காட்டியுள்ளார்.

சிபிஎஸ்இ இந்த புதிய சிஸ்டத்தை முழுமையாக அமல்படுத்துவதற்கு முன்பு நடத்திய சோதனையின் போதே, அதில் பல குளறுபடிகள் இருப்பதாகப் பல வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

ஆசிரியர்களுக்குச் சரியான பயிற்சி வழங்கும் வரை இந்தத் திட்டத்தைத் தள்ளிப்போடுமாறு கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், கல்வி அமைச்சகம் இந்த ஆலோசனைகளை அலட்சியப்படுத்திவிட்டு, அவசர அவசரமாக இத்திட்டத்தைக் கொண்டு வந்ததால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்பட்டுள்ளதாகக் காங்கிரஸ் கூறியுள்ளது.

தேர்வுத் தாள்களை மறுமதிப்பீடு செய்வதற்கான காலக்கெடுவை சிபிஎஸ்இ தொடர்ந்து தள்ளிப்போட்டு வந்துள்ளது.

முதலில் மே 29, பிறகு ஜூன் 1 எனத் தேதிகளை மாற்றியும் முடியவில்லை. ஜூன் 2 அன்று போர்ட்டம் திறக்கப்பட்டபோதும், மாணவர்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.

இந்த விவகாரத்தில் சிபிஎஸ்இ அமைப்பின் இரண்டு உயர் அதிகாரிகளை அரசு அதிரடியாக இடமாற்றம் செய்துள்ளது.

"அமைச்சரை பிரதமர் பாதுகாப்பது ஏன்?" – காங்கிரஸ் கேள்வி

சிபிஎஸ்இ மதிப்பீட்டு ஊழல் அம்பலமாகியும் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகாமல் நீடிப்பது வெட்கக்கேடானது என்று சாடியுள்ள காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ், அவரை பிரதமர் மோடி ஏன் பாதுகாக்கிறார் எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், அதிகாரிகளை மாற்றுவது வெறும் கண்துடைப்பு என்று விமர்சித்துள்ள ராகுல் காந்தி, அமைச்சரை உடனடியாகப் பதவியிலிருந்து நீக்கிவிட்டு இந்த முறைகேடு குறித்து ஒரு சுதந்திரமான நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என மத்திய அரசை ராகுல் வலியுறுத்தியுள்ளார்.